தமிழகத்தின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் இந்த மாதம் தொடங்கவுள்ளது. பட்ஜெட் கூட்டத்தொடர் குறித்த தேதி இதுவரை வெளியாக நிலையில், பட்ஜெட்டில் என்னென்ன சலுகைகள் இடம்பெறும் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றன தமிழக மக்கள்.
இந்த நிலையில், பட்ஜெட்டில் வெள்ளை அறிக்கை ஒப்படைக்கப்பட உள்ளது. மாநில அரசின் நிதி நிலைமையை வெளிச்சம் போட்டுக்காட்டும் அந்த அறிக்கையில் எப்படிப்பட்ட அம்சங்கள் இடம் பெற போகின்றன என்பது குறித்து பார்ப்போம்.
தமிழக நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சமர்ப்பிக்க உள்ள வெள்ளை அறிக்கையில் 2006- ஆம் ஆண்டு கலைஞர் தலைமையிலான தி.மு.க. அரசு பதவியேற்றபோது இருந்த நிதி நிலையில் இருந்து தற்போது உள்ள சூழல் வரை முழுமையான விவரங்கள் இடம் பெற வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. 2011- ஆம் ஆண்டு தி.மு.க. அரசு பதவியில் இருந்து வெளியேறும் போது மாநிலத்தின் கடன் 1 லட்சம் கோடி ரூபாயாக இருந்ததாகவும், அடுத்து அ.தி.மு.க. அரசு பொறுப்பேற்று 10 ஆண்டுகளில் இக்கடன் 5.5 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. பண மதிப்பு நீக்கம் மற்றும் அதைத் தொடர்ந்து வந்த ஜி.எஸ்.டி. ஆகியவற்றால் மாநில அரசின் நிதிநிலை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் கரோனா காரணமாக, அரசின் செலவுகள் கடுமையாக அதிகரித்துள்ளது. இக்காலக்கட்டத்தில் ரேஷன் அட்டைத்தாரர்களுக்கு ரூபாய் 4,000 நிவாரணம், 14 வகை பொருட்கள் அடங்கிய பை தருவதற்காக மட்டும் ரூபாய் 9,000 கோடி செலவிடப்பட்டுள்ளது. மாநிலத்தின் ஒட்டுமொத்த உற்பத்தியில் நிதிப்பற்றாக்குறை 3%-க்குள் இருக்க வேண்டும் என்ற வரம்பை அரசு கடந்து விட்டது என அதிகாரிகள் கூறுகின்றன.
அரசின் நிதிநிலையைத் தவிர மின் வாரியம், போக்குவரத்து கழகங்கள் உள்ளிட்ட அரசு நடத்தும் நிறுவனங்களின் நிதி நிலை விவரங்களும் வெள்ளை அறிக்கையில் இடம் பெற வாய்ப்புள்ளது.மோசமாக உள்ள நிதிச்சூழலை சரி செய்வது எப்படி என்பது தொடர்பான அறிவிப்புகளும் வெள்ளை அறிக்கையில் இடம் பெற உள்ளது.
சட்டப்பேரவையில் நிதிநிலைக் குறித்து வெள்ளை அறிக்கை தரப்படுவது இது முதல்முறை அல்ல. 2011- ஆம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் நிதியமைச்சராக இருந்த பொன்னையன் வெள்ளை அறிக்கையைச் சமர்ப்பித்தார். அதில், தி.மு.க. அரசின் தவறான நிர்வாகத்தால் நிதி நிலை மோசமாக இருப்பதாக பொன்னையன் விமர்சித்திருந்தார்.