சென்னை கலைவாணர் அரங்கில் இரண்டாவது நாளாக நடைபெறும் சட்டப்பேரவை கூட்டத்தொடர் கேள்வி நேரத்துடன் தொடங்கியது.
சட்டப்பேரவையின் கேள்வி நேரத்தில் பேசிய தமிழக முதல்வர் பழனிசாமி, தமிழ்நாட்டில் அனைத்து துறைகளையும் இணைத்து முதலமைச்சர் உதவி மையம் அமைக்கப்படும் என்று தமிழக சட்டப்பேரவையின் 110 விதியின் கீழ் அறிவித்தார். குறைதீர்ப்பு மேலாண்மையை ஒருங்கிணைக்க ஒருங்கிணைக்கப்பட்ட குறைதீர்ப்பு மையம் அமைக்க ரூபாய் 12.78 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒருங்கிணைக்கப்பட்ட குறைதீர்ப்பு மையத்தின் மூலம் ஒரே இடத்தில் மனுக்கள் பெற்று குறைகளைத் தீர்க்க முடியும்.
தமிழ்நாட்டில் 2010- ஆம் ஆண்டு நீட் தேர்வை கொண்டு வந்தது திமுகதான். காங்கிரஸ் ஆட்சியில் திமுக கூட்டணியில் இருந்தபோது,தமிழ்நாட்டில் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது.
நீட் தேர்வு கொண்டு வந்தபோது காங்கிரஸ் கூட்டணியில் திமுக அங்கம் வகித்ததா, இல்லையா? நீட் தேர்வுக்கு ஆதரவாக உச்சநீதிமன்றத்தில் ஆஜரானது உண்மையா, இல்லையா? என திமுகவுக்கு முதல்வர் கேள்வி எழுப்பினார்.
இதனிடையே, பேரவையில் அமளியில் ஈடுப்பட்ட காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களை அவையில் இருந்து வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டதை தொடர்ந்து, அவை காவலர்களால் உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டனர்.