தமிழ்நாடு சட்டப்பேரவையின் விதி 110இன் கீழ் இன்று (03/09/2021) பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், "175வது ஆண்டு விழாவையொட்டி வடசென்னையில் அயோத்திதாச பண்டிதருக்கு மணிமண்டபம் அமைக்கப்படும். அயோத்திதாச பண்டிதரின் பெருமையைப் போற்றும் வகையில் மணிமண்டபம் அமைக்கப்படும். தமிழ்நாட்டு அரசியலை தமிழர், திராவிடம் என்ற சொல்லின்றி நடத்த முடியாது. தமிழர், திராவிடம் என்ற வார்த்தைகளை ஆயுதமாக பயன்படுத்திய மொழிப்போராளி அயோத்திதாச பண்டிதர்.
தூத்துக்குடியில் உள்ள பெரிய காட்டன் சாலை வ.உ.சி. சாலை என பெயர் மாற்றப்படும். கப்பல் தொடர்பான துறைகளில் சிறப்பாக பங்காற்றிவரும் தமிழருக்கு ஆண்டுதோறும் வ.உ. சிதம்பரனார் பெயரில் ரூபாய் 5 லட்சம் ரொக்கப் பரிசுடன், கப்பலோட்டிய தமிழன் விருது வழங்கப்படும். நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓராண்டுக்கு கட்டப்படும் அரசு கட்டடங்களுக்கு வ.உ.சி. பெயர் சூட்டப்படும். நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் வ.உ.சி. பெயரில் புதிய ஆய்வறிக்கை வெளியிடப்படும். நவம்பர் 18ஆம் தேதி அன்று தியாக திருநாளாகக் கொண்டாடப்படும். கோவை பூங்காவில் வ.உ.சி.க்கு சிலை அமைக்கப்படும்" எனத் தெரிவித்தார்.
அயோத்திதாசரின் 175வது பிறந்தநாள் விழாவையொட்டியும், வ.உ. சிதம்பரனாரின் 150வது பிறந்தநாள் கொண்டாடப்படுவதையொட்டியும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இத்தகைய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.