தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனால் தமிழகத்தில் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. மதுரை மாவட்டத்தில் மேலூர்,, திருவாதவூர், ஒத்தக்கடை, சிட்டம்பட்டி, கீழவளவு, கொட்டாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. அதேபோல் திருவண்ணாமலை மாவட்டத்தில் வந்தவாசி, நெற்குணம், தெள்ளார், தேசூர், சாலவேடு உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை காரணமாக பேச்சிப்பாறை அணையில் இருந்து 1,000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. அணையின் முழு கொள்ளளவு 48 அடி ஆகும், தற்போது 45 அடி வரை நீர்மட்டம் உயர்ந்ததால் உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. மேலும் அணைக்கு நீர்வரத்து 2,200 கனஅடியாக இருப்பதால் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம் உள்ள குற்றாலத்தில் பெய்து வரும் தொடர் மழையால் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு இரண்டாவது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் அதிகபட்சமாக ராமேஸ்வரம், தங்கச்சிமடம் மற்றும் பாம்பனில் தலா 11 செ.மீ மழை பதிவாகியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக மன்னார்குடி, திருத்துறைப்பூண்டியில் தலா 10 செ.மீ, நீடாமங்கலம் மற்றும் முத்துப்பேட்டையில் தலா 9 செ.மீ, பாண்டவையாறு தலைப்பில் 8 செ.மீ மழை பதிவாகியுள்ளது. நாகை மாவட்டத்தில் அதிகபட்சமாக வேதாரண்யத்தில் 13 செ.மீ மழை பதிவாகியுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் அதிகபட்சமாக கீழ் அணைக்கட்டு 10 செ.மீ, வெட்டிக்காடு 9 செ.மீ மழை பதிவாகியுள்ளது.