பொய் பேசினாலோ அல்லது தவறு செய்தாலோ சாமி கண்ணை குத்திவிடும் என கடவுளை காரணம் காட்டி குழந்தைகளுக்கு நற்குணங்களை சொல்வது நமது வழக்கம். அப்படிப்பட்ட அந்த சாமிகள் குடிகொண்டுள்ள கோயில்கள் பக்கம் இப்போதெல்லாம் தலை காட்டுவதில்லை நமது பக்த பெருமக்கள். எல்லோரும் தற்போது சாமியை போல் கண்ணுக்கு தெரியாத அந்த கரோனா வைரஸ் பயம்தான். இன்று சித்திரை 1 இந்த நாள் சிலரால் தமிழ் வருடப்பிறப்பு என்றும், ஒரு சிலர் இது சமஸ்கிருத வருடப்பிறப்பு எனவும் கூறுகிறார்கள்.
எப்படியேனும் சித்திரை ஒன்று என்றால் அது ஒவ்வொருவரின் இல்லங்களிலும் கனிவகைகள் வைத்து சாமி படங்களுக்கு முன்பு பூஜை செய்வது வழக்கம். அதேபோல் கோயில்களில் இந்த நாளில் விசேஷ பூஜைகள் நடக்கும். பக்தர்களும் ஏராளமானோர் தங்களுக்கு விருப்பமான கோயில்களுக்கு நடந்து சென்று வழிபடுவது வழக்கம். ஆனால் இன்று நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. ஈரோட்டில் பிரபலமான ஒரு விநாயகர் கோயிலிலும் மற்றொரு ஆஞ்சநேயர் கோயிலிலும் அந்த கடவுள்களுக்கு முக்கனிகளும், சந்தன காப்பு அலங்காரமும் நடந்திருந்தது.
இதை செய்தவர் அந்தக் கோயிலில் உள்ள ஒரு பூசாரி தான். அவர் அலங்காரம் செய்துவிட்டார். கடவுள்களும் மிகவும் பிரகாசமாக காட்சியளித்தார்கள். ஆனால் அவர்களை கண்டு வழிபட பக்தர்கள் தான் இல்லை. இதனால் கடவுளுக்கு விசேஷ அலங்காரம் செய்த பூசாரி ஒரு புகைப்படம் மட்டும் எடுத்துவிட்டு மீண்டும் கடவுளை உள்ளே வைத்து கோயிலை பூட்டிவிட்டு சென்றார். கரோனா வைரஸ் பல விதமான விளையாட்டுக்களை இச்சமூகத்தில் நடத்தி விட்டுத்தான் போகும் போல தெரிகிறது.