Skip to main content

தமிழ்நாட்டின் முதல் ஜல்லிக்கட்டு... 17 காளைகளை கட்டித் தழுவிய வீரருக்கு முதல் பரிசு

Published on 08/01/2023 | Edited on 08/01/2023

 

தமிழ்நாட்டில் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு மாநிலத்திலேயே அதிக வாடிவாசல்களை கொண்ட புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை தொகுதி தச்சங்குறிச்சியில் முதல் ஜல்லிக்கட்டு நடக்கும். வழக்கம் போல இந்த ஆண்டும் பல தடைகளை கடந்து இன்று காலை இந்த ஆண்டுக்கான முதல் ஜல்லிக்கட்டு தொடங்கியது.

 

ஜல்லிக்கட்டு ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்த நிலையில் அதிகாரிகள் ஆய்வுக்கு பிறகு இன்று 8 ந் தேதி ஞாயிற்றுக்கிழமை ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்ற பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், சட்டமன்ற உறுப்பினர்கள் கந்தர்வக்கோட்டை சின்னத்துரை, புதுக்கோட்டை மரு.முத்துராஜா ஆகியோர் தொடங்கி வைத்து நீண்ட நேரம் இருந்து ஜல்லிக்கட்டை பார்த்து ரசித்தனர்.

 

பல காளைகள் வேகமாக வெளியேற ஏராளமான காளைகள் களத்தில் நின்று விளையாடியது. சில காளைகள் களத்தைவிட்டு வெளியேறாமல் மாடுபிடி வீரர்களை மிரட்டிக் கொண்டிருந்தது. சுமார் 500 காளைகள் பங்கேற்ற முதல் ஜல்லிக்கட்டு மதியம் 2 மணிக்கு முடிவடைந்த நிலையில் மாநிலத்திலேயே 7 வாடிவாசல்களைக் கொண்ட தென்னலூர் கிராமத்தைச் சேர்ந்த மாடுபிடி வீரர் யோகேஷ் 17 காளைகளை கட்டித்தழுவி முதல் பரிசு பைக் பெற்றார். ஈரோடு ஸ்ரீதர் 15 காளைகளை பிடித்து இரண்டாம் பரிசு பெற்றார்.

 

அதேபோல தஞ்சை மாவட்டம் மருதக்குடி ராஜ்குமாரின் காளை நீண்ட நேரம் களத்தில் நின்று விளையாடியதால் முதல் பரிசு பெற்றது. விழாவில் மாவட்ட வருவாய் ஆய்வாளர் செல்வி, புதுக்கோட்டை கோட்டாட்சியர் முருகேசன் மற்றும் அதிகாரிகள், போலீசார் சிறப்பாக நடத்தி முடித்தனர். தமிழ்நாட்டின் முதல் ஜல்லிக்கட்டு சிறப்பாக நடந்து முடிந்தது.

 

 

சார்ந்த செய்திகள்