கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை ஜூலை முதல் வாரத்தில் தொடங்கி தற்போது வரை விட்டு விட்டு கனமழை பொழிந்து வருகிறது. இதனால் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான மைசூர், குடகு, ஹாசன் உள்ளிட்ட பகுதிகளிலும் கடலோர மற்றும் மலை மாவட்டங்களிலும் தொடர்ந்து மழை பொழிவதால் கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அதன்படி கர்நாடகாவின் முக்கிய அணைகளான கிருஷ்ணராஜ சாகர் அணை மற்றும் கபினி, ஹேமாவதி உள்ளிட்ட அணைகளில் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. இதனால் தொடர்ந்து உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 32வது கூட்டம் இன்று (24.07.2024) பிற்பகல் 02.30 மணிக்கு நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில் தமிழகம், கர்நாடகம், கேரளா மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த நீர்வளத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
இதனையடுத்து, தமிழக அரசின் நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மணிவாசன் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அதில் அவர், “உச்சநீதிமன்ற உத்தரவின்படி ஆகஸ்ட் மாதத்துக்கான 45 டிஎம்சி தண்ணீரை திறக்க வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆகஸ்ட் மாதத்துக்கான தண்ணீர் திறப்பது குறித்து ஜூலை 30ல் காவிரி ஒழுங்காற்றுக் குழு மீண்டும் கூடுகிறது என ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, 45 டிஎம்சி நீர் திறப்பது குறித்து ஜூலை 30ல் முடிவெடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.