
திமுக நிர்வாகிகளுடன் தொடர்ச்சியாக காணொலி காட்சி மூலம் தினமும் ஆலோசனை நடத்துவதை வழக்கமாக வைத்திருக்கிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். அந்த வகையில் இன்று (19.5.2020) அந்தமான், ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் மகாராஷ்டிராவில் உள்ள திமுக அலுவலக பொறுப்பாளர்களுடன் விவாதித்தார்.
அந்த மாநிலங்களில் உள்ள தமிழர்களின் நிலைமையையும் கரோனாவின் பாதிப்பு எந்த வகையில் இருக்கிறது என்பதையும் விரிவாக கேட்டறிந்தார் ஸ்டாலின். பொறுப்பாளர்கள் தெரிவித்த பிரச்சனைகளை மத்திய- மாநில அரசுகளின் கவனத்துக்கு திமுக எடுத்து செல்லும் என்றும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை செய்யுமாறும் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.

மேலும், இந்த சந்திப்பின்போது, தங்கள் மாநிலங்களில் உள்ள தமிழக தொழிலாளர்களை மீண்டும் தமிழகத்திற்கு அழைத்து வருவதற்கு தமிழக அரசு போதுமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்பது குறித்து தங்கள் கவலையை எழுப்பினர் திமுக பொறுப்பாளர்கள். இது குறித்து தமிழக அரசிடம் பேசுவதாகவும் அவர்களிடம் உறுதி தந்திருக்கிறார் ஸ்டாலின்.