கடந்த 2016ஆம் ஆண்டு சென்னையை அடுத்த மாதவரத்தில் குட்கா வியாபாரி மாதவராவ் குடோனில் நடந்த வருமான வரி சோதனையின் போது, கைப்பற்றப்பட்ட டைரியின் அடிப்படையில் 2018ஆம் ஆண்டு முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்டோர் வீடுகளில் சிபிஐ சோதனை நடத்தியிருந்தது. மாதவராவ் குடோனில் கைப்பற்றப்பட்ட டைரியில் இடம்பெற்றிருந்த பெயர்களின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்றதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி இருந்தன.
தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்தச் சோதனையில் முக்கியமான ஆவணங்களைக் கைப்பற்றிய சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்கும் தொடர்ந்தது. மேலும் 246 கோடி ரூபாய் மதிப்புடைய சொத்துக்கள் முடக்கப்பட்டது. மூன்று அதிகாரிகள் உட்பட 6 பேர் மீது சிபிஐ இந்த வழக்கில் முதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், பி.வி.ரமணா, முன்னாள் ஐபிஎஸ் அதிகாரிகள் டி.கே.ராஜேந்திரன், ஜார்ஜ் உட்பட 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்ய சிபிஐ முடிவு செய்துள்ளது.
மாநில அரசிடம் அனுமதி பெற்றே வழக்குப் பதிவு செய்ய முடியும் என்ற நிலையில் இந்த விவகாரத்தில் 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்ய தமிழக அரசிடம் அனுமதி கேட்டு தலைமைச் செயலாளர் இறையன்புவிற்கு சிபிஐ கடிதம் எழுதியுள்ளது.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இதுகுறித்து தெரிவிக்கையில், ''முன்னாள் அமைச்சர்களிடம் விசாரிக்க வேண்டும் என சிபிஐ அனுமதி கோரினால் தமிழக அரசு அனுமதி தந்துதான் ஆக வேண்டும். முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தும்பொழுது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்றார்கள். ஆனால் வருமான வரித்துறை சோதனை மூலம் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையில் திமுக ஈடுபடவில்லை என்பது நிரூபணம் ஆகிவிட்டது'' எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில், முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா, முன்னாள் காவல் ஆணயர்கள் ராஜேந்திரன், ஜார் உட்பட 11 பேர் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசு சி.பி.ஐ.க்கு அனுமதி அளித்துள்ளது.