சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் காசி தமிழ்ச் சங்கமம் தொடர்பான ஒரு நிகழ்ச்சியில் பேசிய ஆர்.என். ரவி, தமிழ்நாடு என்று சொல்வதை விட தமிழகம் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும் என்று தெரிவித்திருந்தார். இது பெரும் சர்ச்சையானதோடு தமிழ்நாடு முழுவதும் எதிர்ப்புகளும் கண்டனங்களும் எழுந்தது.
இதனைத் தொடர்ந்து ஆளுநர் மாளிகை வெளியிட்ட பொங்கல் அழைப்பிதழில் தமிழ்நாடு ஆளுநர் என்பதற்குப் பதிலாகத் தமிழக ஆளுநர் என்றும், தமிழ்நாடு அரசின் சின்னத்திற்குப் பதிலாக இந்திய அரசின் சின்னம் இடம் பெற்றிருந்தது. இந்த அழைப்பிதழ் வழக்கமான மரபை மாற்றி ஆளுநர் வேண்டுமென்றே தமிழகம் என்று குறிப்பிட்டிருக்கிறார் என பல்வேறு கட்சிகளும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்தன. இதுவும் பெரிய சர்ச்சையானது. இந்நிலையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு, அமைச்சர் ரகுபதி உள்ளிட்டோர் அடங்கிய குழு ஆளுநர் குறித்து குடியரசுத் தலைவரிடம் மனு அளித்தனர். அதன்பிறகு டெல்லி சென்று திரும்பிய ஆளுநர் ரவி, தமிழ்நாடு குறித்த எனது கருத்துகள் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது என விளக்கமளித்திருந்தார்.
இந்நிலையில் ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள குடியரசு தின விழாவிற்கான அழைப்பிதழில் தமிழ்நாடு அரசின் சின்னத்தோடு, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி என்று குறிப்பிட்டுள்ளது. மேலும் திருவள்ளுவர் ஆண்டும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.