Skip to main content

பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

Published on 29/12/2021 | Edited on 29/12/2021

 

Tamil Nadu Chief Minister MK Stalin's letter to Prime Minister Narendra Modi!

 

பருவமழை பாதிப்புகளில் இருந்து மீள விரைவில் நிதி வழங்கிடக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (29/12/2021) கடிதம் எழுதியுள்ளார். 

 

இது தொடர்பாக, தமிழ்நாடு அரசு இன்று (29/12/2021) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழையினால் பாதிக்கப்பட்ட மக்கள் பாதிப்பில் இருந்து மீளவும், சேதமடைந்த கட்டமைப்புகளை சரி செய்திடவும், போக்குவரத்து, நீர்ப்பாசனம், கல்வி போன்றவற்றை மீண்டும் வழக்கமான நிலைமைக் கொண்டு வரவும் ஏதுவாக, மத்திய அரசின் நிதியினை விரைவில் விடுவித்திட உள்துறை அமைச்சகத்திற்கு அறிவுறுத்துமாறு கேட்டு, இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று (29/12/2021) கடிதம் எழுதியுள்ளார். 

 

தமிழ்நாட்டில் இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் வரலாறு காணாத மழை பெய்த சூழ்நிலையில், தமிழ்நாடு அரசு விரைவாக நிவாரணப் பணிகளை மேற்கொண்டு, குறுகிய காலத்தில் இயல்பு நிலையை மீட்டெடுத்துள்ளதாக தனது கடிதத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். 

 

பெருமழையினால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடுவதற்காக, மத்தியக் குழுவினர் 21/11/2021 அன்று தமிழ்நாட்டில் ஆய்வு மேற்கொண்டதைக் குறிப்பிட்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர், தமிழ்நாட்டில் தற்காலிக சீரமைப்புப் பணிகளுக்காக 1,510.83 கோடி ரூபாயும், சாலைகள், பாலங்கள் மற்றும் பொதுக் கட்டடங்கள் போன்ற சேதமடைந்த உள்கட்டமைப்புகளை நிரந்தரமாக சரிசெய்வதற்காக 4,719.62 கோடி ரூபாயும் நிவாரணமாக வழங்கிடக் கோரி, மத்திய அரசுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் 16/11/2021, 25/11/2021 மற்றும் 15/12/2021 ஆகிய நாட்களில் சேத விவரங்களுடன் கூடிய விரிவான அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார். 

 

கரோனா பெருந்தொற்று காரணமாக, மாநில அரசின் நிதி நிலைமை பாதிக்கப்பட்டுள்ள இந்த சூழ்நிலையில், மழை, வெள்ள, பாதிப்புகள் மேலும் அதை கடுமையாக்கியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், மாநிலப் பேரிடர் நிவாரண நிதியும் தற்போது முழுமையாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். 

 

எனவே, தமிழ்நாட்டில் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சரி செய்யவும் சேதமடைந்த உட்கட்டமைப்புகளை புனரமைக்கவும் தேவையான நிதியினை ஒதுக்கீடு செய்து வழங்கிட உள்துறை அமைச்சகத்திற்கு அறிவுறுத்துமாறு தனது கடிதத்தில் வலியறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்." இவ்வாறு அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

சார்ந்த செய்திகள்