துபாயில் 'வேர்ல்ட் எக்ஸ்போ 2022' என்ற தலைப்பில் சர்வதேச கண்காட்சி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. வரும் மார்ச் மாதம் 31- ஆம் தேதி வரை இக்கண்காட்சி நடைபெற உள்ளது. இந்த கண்காட்சியில் இந்தியா, சிங்கப்பூர், உள்ளிட்ட 192 நாடுகள் பங்கேற்றுள்ளன. மேலும், ஒவ்வொரு நாடுகளின் சார்பிலும் அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கண்காட்சியில் இந்திய அரங்கில், வரும் மார்ச் 18- ஆம் தேதி முதல் மார்ச் 24- ஆம் தேதி வரை தமிழ்நாடு அரசு சார்பில் அரங்குகள் அமைத்துக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு சார்பில் சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் அறநிலையத்துறை உள்ளிட்ட துறைகள் பங்கேற்க உள்ளன. கைத்தறி, விவசாயம், சிறுதொழில், பெருந்தொழில் தொடங்க அழைப்பு விடுக்கப்படும் வகையில் அரங்கங்கள் அமைக்கப்பட உள்ளன. இதற்காக, தமிழ்நாடு அரசு சுமார் ரூபாய் 5 கோடியை ஒதுக்கியுள்ளது. இந்த நிலையில், தமிழ்நாடு அரசு சார்பில் அமைக்கப்படும் காட்சி அரங்கில் கலந்து கொள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்த மாதம் இறுதியில் துபாய் செல்வார் என்ற தகவல் கடந்த சில வாரங்களாக பேசப்பட்டு வந்தது.
இந்நிலையில் அவரின் துபாய் பயணம் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. அடுத்த மாதம் 26 மற்றும் 27ம் தேதி அவர் துபாய்க்கு பயணம் மேற்கொள்ள இருப்பதாக தமிழக அரசு சார்பில் உறுதி செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சருடன் அமைச்சர்கள், அரசு உயரதிகாரிகளும் துபாய் செல்ல உள்ளதாகவும், அதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன. தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு முதல் வெளிநாட்டுப் பயணமாக மு.க.ஸ்டாலின், துபாய் செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.