சிக்கிம் மாநிலத்தில் சீன எல்லையில் நடந்த விபத்தில் பலியான லால்குடியைச் சேர்ந்த ராணுவ வீரர் உடல் சொந்த ஊரில் ராணுவ மரியாதையுடன் இன்று (03.07.2021) அடக்கம் செய்யப்படுகிறது. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே திண்ணியம் மணக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அந்தோணி ராஜ் - ராஜம்மாள் தம்பதி. இவர்களுக்கு சம்மனசு, தேவானந்த் என்ற 2 மகன்களும் ரீட்டா மேரி என்ற ஒரு மகளும் உள்ளனர். தென்னை மரம் ஏறும் தொழிலாளியான அந்தோணிராஜ் நான்கு வருடங்களுக்கு முன்பு இறந்தார்.
இவரது மகன் தேவ் ஆனந்த் கடந்த 2014ஆம் ஆண்டு ராணுவத்தில் பணிக்குச் சேர்ந்தார் சிக்கிம் மாநிலத்தில் சீன எல்லையில் பாதுகாப்பு பணியில் சேர்ந்தார். வழக்கம்போல் பாதுகாப்பு பணியில் இருந்த தேவானந்த் ஜூன் 30ஆம் தேதி பணியை முடித்துவிட்டு ராணுவ டிரக்கில் முகாம் திரும்பிக்கொண்டிருந்தார். திடீரென டிரக் தடம்புரண்டு 6,000 அடி உயரத்தில் இருந்து பள்ளத்தில் உருண்டது. இந்த விபத்தில் தேவ் ஆனந்த் உட்பட டிரக்கில் சென்ற வீரர்கள் அனைவரும் இறந்தனர். இந்த தகவலைக் கேட்ட அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். இந்நிலையில், நேற்று தேவ் ஆனந்தின் உடலை சிக்கிமில் இருந்து விமானம் மூலம் பெங்களூரு கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து சாலை மார்க்கமாக இன்று அதிகாலை சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது.
அவரது உடலுக்குத் தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இருவரும் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்கள். மேலும், திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு, காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் ராணுவ அதிகாரிகள் மலர் வளையம் வைத்து அரசு மரியாதை செலுத்தினார்கள். அவரது உடல் சொந்த ஊரில் இன்று மாலை முழு ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்படுகிறது.