சிதம்பரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அருள் பிரகாச இராமலிங்க வள்ளலார் 200 சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு கட்சியின் சிதம்பரம் நகரச் செயலாளர் எஸ்.ராஜா தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராகக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் உ. வாசுகி பங்கேற்று வள்ளலாரின் வாழ்வியல் நெறிமுறைகள் குறித்துப் பேசுகையில், “இன்றைய அரசியல் சூழலில் எவ்வாறு தெளிவாக இருக்க வேண்டும் என்பதற்கான எடுத்துக்காட்டாக இந்தக் கருத்தரங்கம் அமைந்துள்ளது.
தமிழக ஆளுநர் உண்மைக்குப் புறம்பாகப் பேசுவதையும், நடப்பதையும், உறுதிமொழி எடுத்துச் செயல்படுத்தி வருகிறார். வள்ளலார் சனாதனத்திற்கு எதிராகக் குரல் கொடுத்தவர். சனாதனத்திற்கு எதிரான கருத்துக்களை மக்கள் மத்தியில் பரப்புரை செய்தவர். இவரைச் சனாதனத்தின் உச்சம் என ஆளுநர் ரவி பொய்யாகப் பேசியுள்ளார்.
ஒன்றியத்தில் சனாதனத்தை உயர்த்திப் பிடிப்பவர்கள் தான் ஆட்சியில் உள்ளனர். வள்ளலார் சமரச சுத்த சன்மார்க்கம் இதுதான் உண்மையான வாழ்க்கை நெறியென மிகப் பெரிய அளவில் குரல் கொடுத்தார். ஆனால் பாஜகவினரின் கருத்துக்கள் செயல்பாடுகள் வள்ளலாருக்கு எதிராகப் போய்க் கொண்டிருக்கிறது என்பதை மறந்து விடக் கூடாது.
மோடியின் ஆட்சியில் பசியும் வறுமையும் ஏற்படக்கூடிய பொருளாதார கொள்கைகள் கடைப்பிடிக்கப்படுகிறது. பசி, வறுமை கணக்கெடுப்பில் 127 உலக நாடுகளில் 107வது இடத்தில் இந்தியா உள்ளது. ஜாதி, சமயம், மூடநம்பிக்கை, மதங்களை வள்ளலார் கிண்டல் செய்து விமர்சித்துள்ளார். ஆனால் மோடி அரசு இவற்றை மூலதனமாகக் கொண்டு செயல்படுகிறது எனக் குற்றம் சாட்டினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, வள்ளலார் வகுத்துள்ள கொள்கைகள், பாதைகளை, தத்துவத்திற்கு ஏற்பத் தங்களின் நடவடிக்கைகளை அமைத்துக் கொண்டிருக்கிறது. வள்ளலார் சொல்லுகிற மதவெறி அரசியலை நிராகரிப்பதில் முன் வரிசையில் மார்க்சிஸ்ட் கட்சி உள்ளது. சனாதனத்தை எதிர்ப்பதில் வலுவாக உள்ளது. வள்ளலார் சொல்லுகிற மனித உயிர்கள் பாதுகாக்கப்பட வேண்டும்; அன்பு செலுத்தப்பட வேண்டும். அனைத்து மக்களும் எந்தச் சாதி, மதமாக இருந்தாலும் அடிப்படைக் கல்வி, வேலை வாய்ப்பு பெற்று கண்ணியமான ஒரு வாழ்க்கை வாழ வேண்டும் என்பதற்காகக் கொள்கை வகுத்துப் போராட்டக் களத்தில் திகழக்கூடிய கட்சியாக மார்க்சிஸ்ட் கட்சி உள்ளது.
மேலும் பெண்களும், குழந்தைகளும் வன்முறைகளால் பாதிக்கப்படும் போது முதலில் களத்தில் இறங்குவது மார்க்சிஸ்ட் கட்சி தான். அதனால்தான் வள்ளலார் விட்டுச் சென்ற இப்படிப்பட்ட சமரச சுத்த சன்மார்க்க நெறிமுறைகளைப் பொதுவுடைமை தத்துவத்தோடு இணைத்துத் தமிழகத்தில் அப்படிப்பட்ட பாதையில் சென்று கொண்டிருக்கிற இயக்கமாகச் செங்கொடி இயக்கம் இருக்கிறது” எனப் பேசினார்.
இதனைத் தொடர்ந்து கட்சியின் மாவட்டச் செயலாளர் ஜி. மாதவன், மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.ஜி. ரமேஷ்பாபு, முன்னாள் செயற்குழு உறுப்பினர் மூசா, செயற்குழு உறுப்பினர் தேன்மொழி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு பேசினார்கள். இந்நிகழ்ச்சியில் மாவட்டக் குழு உறுப்பினர்கள் பிரகாஷ், வாஞ்சிநாதன், விஜய், செல்லையா, மனோகர், ஸ்டாலின், ஆழ்வார், ஜெயசித்ரா மற்றும் நகர் குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
கூட்டம் தொடங்கியது முதல் மழை தொடர்ந்து பெய்துகொண்டிருந்தது. அதனையும் பொருட்படுத்தாமல் தலைவர்கள் பேசுவதைக் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் சிலர் குடை பிடித்தவாறு, மழையில் நனைந்தபடியே கேட்டுக்கொண்டிருந்தனர்.