
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் உத்தரவுக்கேற்ப திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் நேற்று முதல் தமிழில் அர்ச்சனை தொடங்கியது. ஆண்டாண்டு காலமாக தமிழக ஆலயங்களில் சமஸ்கிருதத்திலேயே வேத மந்திரங்கள் ஓதப்பட்டு அர்ச்சனையும் செய்யப்பட்டு வந்தன. இந்நிலையில் தமிழ் உணர்வாளர்கள் ஆலயங்களில் தமிழில் அர்ச்சனை செய்ய வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். அதற்கேற்ப முன்னாள் முதல்வரான கலைஞர் 1996-2006ம் ஆண்டுகளில் ஆலயங்களில் தமிழில் அர்ச்சனை செய்வதற்கான உத்தரவினைப் பிறப்பித்தார். ஆனால் அவரது ஆட்சிக்கு பின்பு வந்த அ.தி.மு.க. அரசு அந்த உத்தரவில் போதிய ஆர்வம் காட்டவில்லை.

இந்தச் சூழலில் தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றார். தொடர்ந்து தமிழ் உணர்வாளர்கள் இந்து அறநிலையத்துறை பொறுப்பில் வரும் அனைத்துக் கோவில்களிலும் தமிழில் அர்ச்சனை செய்யப்பட வேண்டும். அனைத்து சமூகத்தினரும் அர்ச்சகராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதை ஏற்ற முதல்வர் அனைத்து சமுதாயத்தினரையும் அர்ச்சகராக நியமித்து முதற்கட்டமாக 58 பேருக்கு பணியாணை வழங்கினார். இந்த உத்தரவை ஏற்று இந்த சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோவில்களில் அமைச்சர் சேகர்பாபு தமிழில் அர்ச்சனையை தொடங்கி வைத்தார்.

இதேபோன்று அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் தமிழ் அர்ச்சனை துவக்கவிழா நேற்று நடந்தது. கோவில் இணை ஆணையர் அன்புமணி தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் தெய்வத் தமிழ்பேரவை நிர்வாகிகள், இந்து வேத மறுமலர்ச்சி இயக்கத்தினர், மற்றும் ஆலையத்தின் அதிகாரிகள் பங்கேற்றனர். மேலும் தமிழில் அர்ச்சனை செய்பவரின் பெயர், அவரது தொலைபேசி எண் ஆகிய விவரங்கள் வெளியில் பக்தர்களுக்குத் தெரியும் வகையில் பலகையில் வைக்கப்பட்டது. தமிழில் அர்ச்சனை தேவைப்படுபவர்கள் அந்த அர்ச்சகரைத் தொடர்பு கொண்டு தமிழில் அர்ச்சனை செய்து வழிபாடு செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.
நாழிக்கிணறில் தீர்த்தமாட பக்தர்களுக்குத் தடை
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் பிரசித்தி பெற்றது பக்தர்கள் புனித நீராடும் நாழிக் கிணறு உள்ளது. ஆலயத்தின் அருகிலும் அதன் பக்கமுள்ள கடற்கரையிலிருந்து சுமார் 80 அடி தொலைவில் அமைந்திருக்கிறது நாழிக் கிணறு. கடலுக்கு மிக அருகில் அமைந்திருந்தாலும் இதன் தண்ணீரில் உப்புத் தன்மை மிகவும் குறைந்து இருக்கும். ஆலயத்திற்கு வரும் பக்தர்கள் கடலில் நீராடிவிட்டு பின் இந்த நாழிக்கிணறில் புனித நீராடிவிட்டு, பின்னர் ஆலய வழிபாடு நடத்தி வருவர். ஆண்டாண்டு காலமாக தொடர்ந்து நடந்து வந்த நாழிக் கிணறில் நீராடல் கரோனா தொற்று காரணமாக பக்தர்களுக்குத் தடை விதிக்கப்பட்டு மூடப்பட்டது. ஒரு வருடத்திற்கு பிறகு தற்போது கரோனா பரவல் குறைந்ததையடுத்து ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. கடற்கரைகளுக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதியளிக்கப்பட்டது. இந்த நிலையில் தான் நாழிக்கிணறு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு திறக்கப்பட்டு பக்தர்கள் புனித நீராடி வந்தனர்.

இந்தச் சூழலில் நாழிக்கிணறு பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க முடியாத அளவிற்கு குறுகிய இடமாக இருந்ததால் தொற்று காரணமாக பக்தர்களுக்குத் திடீர் தடை விதிக்கப்பட்டது. இதனால் நாழிக்கிணறு மூடப்பட்டு போலீஸ் காவலில் கொண்டுவரப்பட்டது.
பல நூற்றாண்டுகளுக்கு முன்பு போர் நடந்தபோது படைவீரர்கள் குடிப்பதற்குத் தண்ணீரின்றி தவித்திருக்கிறார்கள். அது சமயம் கடற்கரை பகுதியில் இறைவனருளால் இந்த நாழிக்கிணறு தோன்றியதால் படை வீரர்கள் குறுகிய அளவிலிருக்கும் அந்தக் கிணறிலிருந்து தண்ணீரைப் பருகி இருக்கிறார்கள் என்பது ஐதீகம் என்கிறார்கள் ஆன்மீகப் பற்றாளர்கள். அதே போன்று கடற்கரையிலிருந்து 20 அடி தொலைவிலிருக்கும் செல்வ தீர்த்தத்தின் நீர் உப்புத் தன்மை இல்லாமல் நல்ல தண்ணீராக இருப்பதும் புனிதமானது. இவைகள் திருச்செந்தூர் ஆலயத்தின் சிறப்பான முக்கிய அம்சங்கள் என்கிறார்கள்.