புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஒன்றியம் ஆவணத்தான்கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி பேவர் பிளாக் சாலைப் பணிகள் தொடங்கி வைக்கச் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் சென்றிருந்தார். அப்பொழுது பள்ளியில் போதிய கட்டட வசதி இல்லாமல் இட நெருக்கடியில் 156 மாணவ, மாணவிகள் படிக்கும் நிலையில் கூடுதல் வகுப்பறை கட்டடம் வேண்டும் என்று அறந்தாங்கி வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கூறியுள்ளார்.
'ரூல்ஸ் சார்' என்று அதிகாரி சொல்ல... ‘உங்களால தான் ஒரு பள்ளிக் கட்டடம் கூட கட்ட முடியல’ என்ற அமைச்சர் மெய்யநாதன், 'உங்க பிள்ளைங்கள இந்த பள்ளிக் கூடத்தில் படிக்க வைப்பீங்களா? ஏழை குழந்தைகள் படிக்கிற பள்ளி இது. அரசு திட்டங்களை நடைமுறைப்படுத்துங்க' என்று கடிந்து கொண்டு உடனே புதிய வகுப்பறை கட்டடம் கட்ட நடவடிக்கை எடுங்கள் கூறிச் சென்றார். அந்த வீடியோ வைரலானது.
இந்த நிலையில் இன்று சனிக்கிழமை அறந்தாங்கி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கல்வித்துறை சம்பந்தமாக அவசர ஆய்வுக்கூட்டம், ஒன்றிய சேர்மன் மகேஸ்வரி சண்முகநாதன் தலைமையில் நடந்தது. இதில் அறந்தாங்கி கல்வி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர், ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பொறியாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்ட கூட்டத்தில் அமைச்சர் மெய்யநாதன், ‘அறந்தாங்கி ஒன்றியத்தில் உடனடியாக கட்டடம் தேவைப்படும் அரசுப் பள்ளிகள் பற்றிய விபரப் பட்டியல்’ கேட்டபோது 27 பள்ளிகளில் கட்டடம் தேவை எனக் கல்வித்துறை அலுவலர்கள் பட்டியல் கொடுத்தனர்.
அந்த பள்ளிகள் பற்றிய விபரங்களைக் கேட்டறிந்த பிறகு 27 பள்ளிகளுக்கும் உடனடியாக கட்டடம் தேவை உள்ளதால் ஒன்றிய அதிகாரிகள் துரிதமாகச் செயல்பட்டு புதிய வகுப்பறை கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும் அழியாநிலை இலங்கை தமிழர் முகாமில் 100 வீடுகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் பணிகள் தொடங்கும் என்றார்.
நேற்று ஒரு அரசுப் பள்ளிக்கு புதிய வகுப்பறை கட்ட ரூல்ஸ் பேசிய அதிகாரிகளைக் கடிந்து கொண்ட அமைச்சர், இன்று திடீர் ஆய்வுக் கூட்டம் நடத்தி 27 பள்ளிகளுக்கு வகுப்பறைகள் கட்ட நடவடிக்கைக்கு உத்தரவிட்டது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.