மதுரையில் பரபரப்பு பள்ளிவாசலில் வெடிகுண்டு வீச்சு
மதுரை ஈத்கா பள்ளிவாசலில் நேற்று அதிகாலை வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகளை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மதுரை, காளவாசல் பகுதியில் உள்ளது ஈத்கா பள்ளிவாசல். நேற்று அதிகாலை ‘பஜ்ர்’ என்ற காலை நேரத் தொழுகை நடந்து கொண்டிருந்தது. இமாம் தொழுகை நடத்திக் கொண்டிருக்க, அனைவரும் தொழுகையில் இருந்தனர். காலை 5.30 மணியளவில் பள்ளிவாசல் வளாகத்தில் தொழுகைக்கு வருவோருக்கான முன்புற வாகன பார்க்கிங்கில், ஒரு டூவீலர் அருகே மர்மப்பொருள் விழுந்த சத்தம் கேட்டது. அங்கிருந்தவர்கள் சென்று பார்த்தபோது, 2 லிட்டர் வாட்டர் கேனை வெட்டி அதற்குள் பிளாஸ்டிக் பந்துக்குள் கருமருந்து, கருந்திரி வைத்து வீசியிருந்ததும், அது உடைந்து சிதறி கிடந்ததும் தெரிந்தது.
இதுகுறித்து பள்ளிவாசல் நிர்வாகிகள், கரிமேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். வெடிகுண்டு நிபுணர்கள் மோப்பநாயுடன் வந்து சோதனை மேற்கொண்டனர். மாடிப்பகுதியிலிருந்து பள்ளிவாசலுக்குள் வெடிகுண்டு தூக்கி வீசப்பட்டிக்கலாம் என்பதால், அருகாமை மாடி வீடுகளுக்கும் சென்று போலீசார் சோதனை நடத்தினர்.
பந்து போன்ற பிளாஸ்டிக் உருளைக்குள் 250 கிராம் வெடிமருந்து இருந்ததும் தெரிந்தது. சிதறிக் கிடந்த வெடிமருந்துடன், துகள்களையும் போலீசார் சேகரித்தனர். கைப்பற்றப்பட்ட வெடிமருந்தை நிபுணர்கள் கொண்டு சென்று, புறநகர் பகுதியில் வெடித்து செயலிழக்க வைத்தனர். அதிக அழுத்தத்துடன் மோதினால் பெரிய அளவில் வெடித்து சிதறும் வகையில் இந்த குண்டு தயாரிக்கப்பட்டிருந்தது என நிபுணர்கள் தெரிவித்தனர். இதன்பேரில் கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். விரைவில் குற்றவாளிகள் பிடிபடுவார்கள்,’’ என்றனர்.