திரைப்பட நடிகர் எஸ்.வி.சேகர் தனது டுவிட்டர் பகுதியில் பத்திரிகையாளர்கள் பற்றியும், பெண் பத்திரிகையாளர்களையும் மிகவும் அவதூறாக விமர்சித்திருப்பது தமிழ்நாடு முழுக்க பத்திரிகையாளர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதன் தொடர்சியாக ஈரோடு மாவட்ட பத்திரிகையாளர்கள் நலச்சங்கம் இன்று அவசர செயற்குழு கூட்டத்தை நடத்தியதோடு, நாளை 21.04.2018 சனிக்கிழமை எஸ்.வி.சேகரை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறார்கள்.
இது சம்மந்தமாக சங்கத்தின் நிர்வாகிகள் கூறும்போது, பத்திரிகையாளர்களின் பணி என்பது மிகவும் கடினமானது. ஊன், உறக்கம் இல்லாமல் பகல் இரவு விழித்திருந்து செய்திகளை மக்களிடம் கொண்டு செல்வதில் பத்திரிகையாளர்களின் பணி மகத்தானது. ஆனால் ஒரு சில அரசியல்வாதிகள் தொடர்ந்து பத்திரிகையாளர்களை கொச்சைப்படுத்தும் விதமாக பேசி வருகிறார்கள்.
இதில் நடிகர் எஸ்.வி.சேகர் ஒருபடி மேலே போய் பெண் பத்திரிகையாளர்கள் மிகவும் கீழ்த்தரமாக மட்டரகமாக தனது டுவிட்டரில் பதிவிட்டதோடு, ஒட்டுமொத்த பத்திரிகையாளர்களையும் அவர் பதிவில் கேவலப்படுத்தியுள்ளார். இன்று அனைத்து துறைகளிலும் பெண்கள் பணியாற்றுகிறார்கள். அதேபோல் ஆபத்தான மிகவும் சிக்கலான, கஷ்டமான பணிகளிலும் பெண்கள் சவாலாக செய்து வருகிறார்கள். அப்படிப்பட்டவர்களை பார்த்து நா கூசம் அளவுக்கு டுவிட்டரில் பதிவிட்டு பின்னர் நான் அவன் இல்லை என்று சொல்வதைப்போல வேறொரு பதிவு என்றும், அதனை தெரியாமல் பார்வேடு செய்துவிட்டேன் என்று எஸ்.வி.சேகர் தப்பிக்க நினைப்பது மிகவும் கண்டனத்திற்கு உரியது. அதேபோல் உயர் பதவிகளில் உள்ள ஆளுநர் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பெண் பத்திரிகையாளரிடம் அநாகரிகமாக நடந்ததும், தனது சுயவிளம்பரத்துக்காக மிகவும் மட்டமாக டுவிட்டரில் கருத்து போட்ட பாஜக தேசிய செயலாளர் எச். ராஜாவின் செயலையும் ஈரோடு மாவட்ட பத்திரிகையார்கள் நலச் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது என்றனர். தொடர்ந்து இவர்கள் மீது வழக்குகள் கொடுக்க ஆயத்தமாகி வருகிறார்கள்.