இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய மதுரை எம்.பி சு.வெங்கடேசன் மத்திய அரசைக் கடுமையாக விமர்சித்துப் பேசினார். இதுதொடர்பாக அவர் பேசியதாவது, "மதுரையில் எப்போது எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்கப்படும் என்று கேட்டால்... அதற்கான பதிலை மத்திய அரசு கூறாது. எப்போது மருத்துவமனை கட்டி முடிக்கப்படும் என்று சொல்கிறார்கள். நேற்று கூட மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை வரும் 2026ம் ஆண்டு திறக்கப்படும் என்று மத்திய அமைச்சர் கூறுகிறார்.
எங்களின் கோரிக்கை எப்போது மருத்துவமனை திறக்கப்படும் என்பதல்ல; மருத்துவமனை எப்போது கட்டத் துவங்குவீர்கள் என்பதே எங்களுடைய கேள்வி. துவங்காத ஒரு திட்டத்தை கட்டி முடிக்கப்பட்டதைப் போல் ஒரு தோற்றத்தை உருவாக்குகிறீர்கள். பிரதமரால் துவங்கப்பட்ட ஒரு திட்டத்தைத் தொடங்காமல் தமிழகத்தைத் தொடர்ந்து வஞ்சிக்கிறீர்கள்.
மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கல்வி உதவித்தொகை தற்போது வழங்க மறுத்து வருகிறீர்கள், ஆனால் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அள்ளிக் கொடுத்து வருகிறீர்கள். அவர்கள் பணத்தைத் திரும்பக் கொடுக்காவிட்டாலும் வராக்கடனாகத் தள்ளுபடி செய்கிறீர்கள். கிராமங்களுக்கு அளிக்கப்பட்டு வந்த திட்டங்களுக்கு தற்போது இந்தியில் புதிய பெயரை வைக்கிறீர்கள்.
ஆனால் அதற்கான நிதியினை ஒதுக்க மறுக்கிறீர்கள். எங்கள் தமிழகத்தில் ஒரு பழமொழி சொல்லுவார்கள், ‘பேரு வச்சியே சோறு வச்சியா என்பார்கள்’. அதைப்போலத் திட்டத்தைத் துவங்கும் மத்திய அரசு அதற்கான நிதியினை ஒதுக்க மறுக்கிறது" என்றார்.