இரண்டு ஆண்டுகளாக சிறையிலிருந்து வந்த கேரள பத்திரிகையாளர் சித்திக் காப்பானுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2020ம் ஆண்டு உ.பி மாநிலம் ஹத்ராஸில் 19 வயது இளம்பெண் ஒருவர் 5க்கும் மேற்பட்ட நபர்களால் கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டார். இதுதொடர்பாக செய்தி சேகரிக்க சென்ற கேரள பத்திரிகையாளர் சித்திக் காப்பான் கடந்த 2020ம் ஆண்டு அக்டோபர் 5ம் தேதி உ.பி மாநில போலீசாரால் நடுரோட்டில் கைது செய்யப்பட்டார். மேலும் இவர் மீது பயங்கரவாத செயல்களுக்கு நிதியுதவி அளித்ததாக கூறி உபா சட்டத்தின் கீழ் அம்மாநில போலீசார் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
இதற்கிடையே பலமுறை அவர், ஜாமீன் கோரி நீதிமன்றங்களில் மனுக்கள் தாக்கல் செய்தார். ஆனால், அந்த மனுக்களை எல்லாம் நிராகரித்த நிலையில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு உச்சநீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியுள்ளது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி யு.யு லலித், இந்த உத்தரவை பிறப்பித்தார். ஆறு வாரங்கள் சித்திக் டெல்லியில் தங்கி இருக்க வேண்டும் என்றும், பாஸ்போர்ட்டை நீதிமன்றத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தனது உத்தரவில் அவர் தெரிவித்துள்ளார்.