
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே பசவனதொட்டி என்ற கிராமம் உள்ளது. இங்கு சுரேஷ் என்பவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவருக்கு ரக்ஷித் என்ற மூன்று வயது மகன் உள்ளார். இந்நிலையில் கடந்த ஒரு சில தினங்களாக தமிழகத்தில் பல்வேறு இடங்களிலும் கோடை மழை பெய்து வருகிறது. இதே போன்று பசவனத்தொட்டி கிராமத்திலும் கடந்த ஒரு சில தினங்களாக மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் சுரேஷ் வசித்து வந்த வீடானது பழமை வாய்ந்த ஓட்டு வீடு ஆகும். இதனால் அங்கு பெய்த கனமழையால் வீட்டின் சுவர்கள் மழை நீரில் நனைந்து பாதிப்படைந்துள்ளன. ரக்ஷித் தனது வீட்டிற்கு வெளியில் விளையாடிக் கொண்டிருந்த போது யாரும் எதிர்பாராத வகையில் வீட்டின் சுவர் இடிந்து ரக்ஷித் மீது விழுந்துள்ளது. உடனடியாக குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் 3 வயது குழந்தை பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.