கடன் தொல்லையால் தம்பதி தற்கொலை
குரோம்பேட்டை, ஜமீன் ராயப்பேட்டை போஸ்டல் நகர், வரசித்தி விநாயகர் கோயில் தெருவில் வசித்து வந்தவர் ராஜேஷ் (45), இவரது மனைவி சரஸ்வதி (36). இவர்களது 2 மகன்கள் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 7 மற்றும் 3ம் வகுப்புகளில் படித்து வருகின்றனர். கணவன், மனைவி இருவரும், குரோம்பேட்டை ராதா நகர் மெயின் ரோட்டில், தள்ளுவண்டியில் பஜ்ஜி, போண்டா விற்பனை செய்து வந்தனர். இதில், போதிய வருவாய் கிடைக்கவில்லை எனவும், பண தேவைக்கு வெளியில் சிலரிடம் கடன் வாங்கியதாகவும் கூறப்படுகிறது.
ஆனால், வாங்கி கடனை குறிப்பிட்ட தேதியில் கொடுக்காததால், பணம் கொடுத்தவர்கள் தொல்லை செய்து வந்ததாக தெரிகிறது. மேலும், கடந்த 5 மாதமாக வசிக்கும் வீட்டுக்கு வாடகை தரவில்லை எனவும் கூறப்படுகிறது. வீட்டு உரிமையாளர் அரி என்பரும், வாடகையை கேட்டு வந்துள்ளார். விரைவில், தீபாவளி பண்டிகை வர உள்ளதால், தங்களது குழந்தைகளுக்கு புத்தாடை வாங்க கூட முடியாமல் தம்பதி மன உளைச்சலில் இருந்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு அதே பகுதியில் உள்ள சரஸ்வதியின் தாய் வீட்டில், குழந்தைகளை விட்டுவிட்டு தம்பதி வீட்டுக்கு வந்தனர். பின்னர், வீட்டு உரிமையாளரை செல்போனில் தொடர்புகொண்டு, வீட்டு வாடகை பாக்கியை நாளை காலை 7 மணிக்கு வந்து வாங்கிக் கொள்ளுங்கள், என தெரிவித்துள்ளனர். அதன்படி, நேற்று காலை 7 மணியளவில் வாடகை வசூலிக்க அரி வந்தபோது, வீட்டு கதவு மூடி இருந்தது. அவர் பலமுறை கதவை தட்டியும் திறக்கவில்லை. இதனால், சந்தேகமடைந்து, கதவை வேகமாக தள்ளியபோது திறந்து கொண்டது. உள்ளே சென்றபோது ராஜேஷ், சரஸ்வதி ஆகியோர் தூக்கில் சடலமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்தார். தகவலறிந்து சிட்லப்பாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, சடலங்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.