பெரம்பலூர் மாவட்ட அட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பெரம்பலூர் சர்க்கரை ஆலை 44வது பங்குதாரர்கள் பேரவை கூட்டத்தில் அனைத்து கரும்பு விவசாயிகள் சங்க கூட்டமைப்பு சார்பில் (23-12-2021) நேற்று சர்க்கரைத் துறை ஆணையர் ஹர்மந்தர் சிங்கிடம் இ.ஆ.ப. கோரிக்கை மனுவை அளித்தனர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரும், இயக்குநருமான பி. வெங்கட பிரியா இ.ஆ.ப. முன்னிலை வகித்தார், தலைமை நிர்வாகி ரமேஷ் DRO வரவேற்றார்.
இந்நிலையில் கரும்பு விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் ஆணையரிடம் அளித்த கோரிக்கை மனுவில் பல்வேறு முக்கிய அம்ச கோரிக்களை முன்வைத்துள்ளனர். மேலும் பெரம்பலூர் சர்க்கரை ஆலைக்கு கரும்பு வெட்டிய விவசாயிகளுக்கு கடந்த ஆண்டுகளில் இருந்த பாக்கி தொகையை வழங்கியதோடு, ஊக்கத் தொகை ரூ. 42.50ம்,சிறப்பு ஊக்கத் தொகை டன்னுக்கு ரூ.150 வழங்க அரசு ஆணை வெளியிட்ட தமிழக அரசுக்கும், முதல்வருக்கும் பெரம்பலூர் சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் சங்க கூட்டமைப்பு நன்றியை தெரிவித்தனர். ரூ. 192.50ஐ உழவர் திருநாளுக்குள் வழங்க வேண்டுமாய் கேட்டுக்கொண்டனர்.
அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது, “2021-2022ம் ஆண்டுக்கு வெட்டப்படும் கரும்புக்கு வெட்டிய 15 தினங்களில் கரும்பு விவசாயிகளுக்கு பணம் கிடைத்திட ஆவன செய்ய வேண்டுமாய் கூட்டமைப்பு வலியுறுத்துகிறது. கடந்த மாநில அரசு கொண்டுவந்த வருவாய் பங்கீட்டு சட்டத்தை ரத்து செய்து, தற்போதைய தமிழக அரசு தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தவாறு முத்தரப்பு பேச்சு வார்த்தை நடத்தி கரும்புக்கு டன்னுக்கு ரூ. 4000 அறிவிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். அரசின் நேரடி கண்காணிப்பில் உள்ள, அனைத்து தகுதியும் உள்ள, பொதுத்துறை நிறுவனமான, பெரம்பலூர் சர்க்கரை ஆலைக்கு வரும் 2022-2023ம் ஆண்டில் எத்தனால் ஆலையை கொண்டுவர வேண்டும் என கூட்டமைப்பு வலியுறுத்துகிறது.
பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் உள்ள இணைமின் உற்பத்தியை 18 மெகா வாட்டாக உயர்த்த வேண்டும் எனவும் மின் உற்பத்தியின் மூலம் கிடைக்கும் லாபத்தில் 50% சதவிகிதத்தை ஆலை நிர்வாகத்திற்கு கொடுக்க ஆவன செய்ய வேண்டும் என கூட்டமைப்பு வலியுறுத்துகிறது. இணைமின் திட்டத்துக்கு சுமார் ரூ. 8கோடியே 68 லட்சம் பங்குத்தொகை வழங்கிய கரும்பு விவசாயிகளுக்கு பல ஆண்டுகளாக பங்குப்பத்திரம் வழங்கவில்லை. உடனடியாக பங்குப்பத்திரமும் அதற்கான வட்டியும் வழங்க வேண்டும் என எங்கள் கூட்டமைப்பு வலியுறுத்துகிறது. பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் இருந்து கடந்த 21-3-2020 முதல் 31-3-2020 வரை 7200 மெ.டன் கழிவுப்பாகு சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு வழங்கப்பட்டது.
அதன் மூலம் பெரம்பலூர் சர்க்கரை ஆலைக்கு வரவேண்டிய பாக்கித் தொகை சுமார் ரூ. 8கோடியே 71 லட்சத்து 91 ஆயிரம் ஆகும். மேலும் பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் இருந்து கடந்த 21-3-2020 முதல் 31-3-2020வரை 450 மெ. டன் கழிவுப்பாகு அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு அனுப்பியதில் வரவேண்டிய பாக்கி தொகை சுமார் ரூ. 1 கோடியே 31லட்சத்து 92 ஆயிரம். இந்த தொகையை ஆணையர் பெற்றுத்தருமாறு கேட்டுக்கொள்கிறோம். ஆலையில் பழைய (Staffing Pattern) தொழிலாளர் அளவுகோல் 469, புதிய அளவுகோல் 345, தற்போது பணிபுரியும் தொழிலாளர்கள் 159இவர்களோடு ஓய்வுபெற்ற தொழிலாளர்கள் மற்றும் தற்காலிக பணியாளர்களை வைத்துக்கொண்டு ஆலையை இயக்க வேண்டிய நிலையில் உள்ளது.
இதனால் சிலநேரங்களில் விபத்துக்கள் ஏற்படவாய்ப்பு உள்ளது. எனவே காலிப்பணியிடத்தை நிரப்ப வேண்டும் என எங்கள் கூட்டமைப்பு வலியுறுத்துகிறது. ஆலை பங்குதாரர்களுக்கும், விவசாயிகளுக்கும் பேரவைக்கூட்டத்தின்போது 2கிலோ சர்க்கரை வழங்கப்படுவதை 5 கிலோவாக வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறது. பெரம்பலூர் சர்க்கரை ஆலை 2019-2020 நிதியாண்டில் 2,22,186மெ. டன்னும், 2020-2021 நிதியாண்டில் 1,56,891 மெ. டன் கரும்பு அரைத்தது. நடப்பு ஆண்டில் (2021-2022) ல் 3 லட்சம் டன் அரைக்க திட்டமிடப்பட்டு கரும்பு பயிரிட முயற்சி எடுத்துக்கொண்ட அதிகாரிகளின் சீரிய முயற்சிக்கு நன்றியையும் பாராட்டுதலையும் தெரிவித்து கொள்கிறோம். வரும் ஆண்டில் (2022-2023) 4 லட்சம் டன் அரைப்பதற்கான திட்டமிடலை மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு சர்க்கரை கழகத்தையும்,ஆலை நிர்வாகத்தையும் கேட்டுக்கொள்கிறோம்.
கரும்பு விவசாயிகள் தரப்பில் கரும்பு பயிரிடுவதற்கான முழு ஒத்துழைப்பும் நல்குவோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். பெரம்பலூர் சர்க்கரை ஆலை மெயின் கேட்டில் இருந்து கரும்பு இறக்கும் கரும்புத் தளம் வரை உள்ள சாலை மிகவும் பழுதடைந்து குழி ஏற்பட்டு கரும்பு ஏற்றிச்செல்லும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் நிலையில் உள்ளது. எனவே அந்த சாலையை உடனே சீரமைத்துத் தரவேண்டும் என கூட்டமைப்பு கேட்டுக்கொள்கிறது” என குறிப்பிட்டுள்ளனர்.
தமிழ்நாடு சர்க்கரை கழகம் சார்பில் கூடுதல் பதிவாளர் ஏ. கே. சிவமலர், தலைமைப்பொறியாளர் பிரபாகரன், சர்க்கரை கழக தலைமைக் கரும்பு அலுவலர் மாமுண்டி, நிருமச் செயலாளர் அழகர்சாமி,தலைமைக் கரும்பு அலுவலர் ரவிச்சந்திரன், துணைத்தலைமை ரசாயினர் பெரியசாமி, துணைத்தலைமைப் பொறியாளர் (பொறுப்பு) நாராயணன், கணக்கு அலுவலர் ஜான்பிரீட்டோ, தொழிலாளர் நலஅலுவலர் ராஜாமணி, மற்றும் பொறியியல் , ரசாயணப்பிரிவு ,கரும்பு அபிவிருத்தி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கோரிக்கைகள் அடங்கிய இந்த மனுவினை கரும்பு விவசாயிகள் சங்க பிரதிநிதிகளான வேணுகோபால், ராஜாசிதம்பரம், மு. ஞானமூர்த்தி, சீனிவாசன், ராமலிங்கம் டிராக்டர் உரிமையாளர்கள் சங்க செயலாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் கொடுத்தனர்.