தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடற்பகுதியில் வளிமண்டல சுழற்சி உருவாக வாய்ப்புள்ளதாக நேற்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில், கிழக்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாகத் தமிழ்நாட்டில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மேலும் வரும் 5 ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும் என்றும், தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புதிய காற்றழுத்த தாழ்வு வரும் டிசம்பர் 5-ஆம் தேதி அந்தமான் அருகே ஏற்படக்கூடும். இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்ந்து புயலாக மாற்றமடையலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
அந்தமான் அருகே உருவாகும் இப்புயல் வட தமிழகம் நோக்கி நகர்வதால் சென்னையில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் டிசம்பர் 4ஆம் தேதி முதல் 6ம் தேதி வரை தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று வீசக் கூடும் என்பதால் மீனவர்கள் யாரும் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.