புதுச்சேரி அருகிலுள்ள தமிழக பகுதியான விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பத்திலுள்ள தங்கும் விடுதிகளில் பாலியல் தொழில் நடப்பதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதையடுத்து விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின்பேரில் கோட்டகுப்பம் துணை காவல் கண்காணிப்பாளர் அஜய் தங்கம், காவல் ஆய்வாளர் சரவணன் தலைமையிலான காவலர்கள் நேற்று முன்தினம் ஆய்வு செய்தனர். அப்போது முன்னாள் அ.தி.மு.க பிரமுகர் ஒருவருக்கு சொந்தமான புதிய தங்கும் விடுதியில் சோதனை செய்தபோது அதில் பாலியல் தொழில் செய்யும் நோக்கில் இரண்டு பெண்களை அடைத்து வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த விடுதி புதுச்சேரி சோலை நகரை சேர்ந்த ராஜாங்கம் என்பவரது மகன் சந்துருஜி(40) என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்தது. முன்னாள் அ.தி.மு.க பிரமுகரான சந்திருஜி ஏற்கனவே புதுச்சேரியில் நடைபெற்ற போலி ஏ.டி.எம் கொள்ளை மோசடியில் சிக்கி, ஜாமினில் வெளி வந்துள்ளார்.
அதையடுத்து சந்துருஜி, அவது நண்பர் விஜய்குமார்(37), தங்கும் விடுதியில் பணியாற்றிய டெல்லியை சேர்ந்த வாட்ச்மேன் அணில்ஜோசப்(32) ஆகிய மூன்று பேரையும் விபச்சார தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.
அதனை தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் பியூட்டிஷியன் மற்றும் மசாஜ் தொழில் கற்றுத் தருவதாக கூறி சென்னை வளசரவாக்கத்தில் இருந்து இரண்டு துணை நடிகைகளை அழைத்து வந்து பாலியல் தொழிலுக்கு உட்படுத்தும் நோக்கில் அடைத்து வைத்திருந்தது தெரியவந்தது. அந்த இரண்டு துணை நடிகைகளையும் காவல்துறையினர் சென்னையில் உள்ள அரசு காப்பகத்துக்கு அனுப்பி வைக்க முயற்சித்த நிலையில் ஊடங்கை முன்னிட்டு விடுதி நிர்வாகம் ஏற்றுக்கொள்ளவில்லை. அதையடுத்து திருச்சியில் உள்ள காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.
கைது செய்யப்பட்ட 3 பேரும் வானூர் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர். மேலும் பாலியல் தொழிலுக்கு பயன்படுத்தப்பட்ட சந்துருவின் கார் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டது. ஊரடங்கு நடைமுறையில் இருக்கும்போது சட்டத்துக்கு விரோதமாக இயங்கியதுடன், அங்கு ஸ்பா என்ற பெயரில் இணையதளம் மூலம் ஆண், பெண்களை வரவழைத்து, தங்க வைத்த அந்த தங்கும் விடுதிக்கு கோட்டக்குப்பம் பேரூராட்சி செயல் அலுவலர் ராமலிங்கம் மூடி சீல் வைத்தார்.
இந்த விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்ட சந்துருஜியுடன் புதுச்சேரியை சேர்ந்த சில அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள், தொழிலதிபர்கள் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளனர். அவர்கள் இந்த தங்கும் விடுதிக்கு அடிக்கடி சென்று வந்ததாக கிடைத்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் தொடர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் புதுச்சேரியை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுவதால் அந்த தங்கும் விடுதிக்கு சென்று வந்த முக்கிய பிரமுகர்கள் பீதியில் உள்ளதாக கூறப்படுகிறது.