ஆக்கிரமிப்பிலிருந்து நீர்நிலைகளைப் பாதுகாக்க எடுத்த நடவடிக்கைகள் தொடர்பாக அறிக்கை அளிக்க தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் செம்மஞ்சேரியில் புதிதாக கட்டப்படும் காவல் நிலையம் தாமரைக்கேணி என்ற நீர் நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருப்பதாகவும் இந்தக் கட்டுமானப் பணிகளுக்குத் தடை விதிக்க வேண்டும் எனவும், நீர்நிலையைப் பழைய நிலைக்கு கொண்டுவரக் கோரி அறப்போர் இயக்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், சம்மந்தப்பட்ட இடத்தை ஆய்வுசெய்ய ஐ.ஐ.டி பேராசிரியர்கள் இரண்டு பேர் அடங்கிய குழுவை நியமித்து உத்தரவிட்டது. உயர் நீதிமன்ற உத்தரவின்படி ஐ.ஐ.டி பேராசிரியர்கள் பாலாஜி நரசிம்மன், சவுமேந்திரர் ஆகியோர் ஆய்வு செய்து நீதிமன்றத்திற்கு அளித்த அறிக்கையில் காவல் நிலையம் கட்டப்பட்ட இடம் நீர்நிலையை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இந்நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பேனர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று (15.09.2021) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ஐ.ஐ.டி. போரசிரியர் அறிக்கையில் சம்பந்தப்பட்ட காவல் நிலையம் கட்டப்பட்டுள்ள இடம் நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருப்பதாகவும் இதேபோன்று தமிழ்நாட்டில் பல நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் ஆவணங்களின் அடிப்படையில் செம்மஞ்சேரி காவல் நிலையம் கட்டப்பட்டுள்ள இடம் நீர்நிலை எனவும் 1987ஆம் ஆண்டு வருவாய்த்துறை ஆவணங்கள் அடிப்படையில் சம்பந்தப்பட்ட இடம் மேய்க்கால் புறம்போக்கு எனும் இருப்பதாகவும் தெரிவித்த நீதிபதிகள், நீர் தேங்கும் பகுதிகளைப் பாதுகாக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர். மேலும், நீர்நிலைகள் ஆக்கிரமிப்புகள் மீது எடுத்த நடவடிக்கை தொடர்பாகவும், அதனைப் பாதுகாக்க எடுத்த நடவடிக்கைகள் தொடர்பாகவும் தமிழ்நாடு அரசு இரண்டு வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.