கீழடி ஆய்வில் மூடி மறைக்கும்
மத்திய அரசு! ஜி.ரா. குற்றச்சாட்டு
2500 ஆண்டுகளுக்கு முன்பு சாதிகள் இல்லை என்பது கீழடி அகழ்வாராய்ச்சியின் மூலம் தெரிய வருகிறது எனவும், இந்துத்துவ வரலாற்று பார்வைக்கு இது முரணாக இருந்து வருவதால் அதனை மூடி மறைக்க மத்திய அரசு முயற்சி செய்கிறது என மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மாநில தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் குற்றம் சாட்டினார்.
கோவை காந்திபுரம் பகுதியிலுள்ள மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட தலைமை அலுசலகத்தில் அக்கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். கீழடி அகழ்வாராய்ச்சியின் மூன்றாம் கட்ட பணி செப் 20 முடிவடைந்த நிலையில் மத்திய அரசு ஆராய்ச்சி முடிந்ததாக கூறுவது ஏற்புடையதல்ல என அப்போது அவர் தெரிவித்தார்.2500 ஆண்டுகளுக்கு முன்பு சாதிகள் இல்லை என்பது கீழடி அகழ்வாராய்ச்சியின் மூலம் தெரிய வருகிறது எனவும் இந்துத்துவ வரலாற்று பார்வைக்கு இது முரணாக இருந்து வருவதால் அதனை மூடி மறைக்க மத்திய அரசு முயற்சி செய்கிறது எனவும் குற்றம் சாட்டினார்.மேலும் மத்திய அரசு இந்த முடிவை கைவிட்டு ஆராய்ச்சி பணி தொடர அனுமதிக்க வேண்டும் எனவும் அதற்கான நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
கடந்த நாற்பது மாத கால மத்திய அரசின் ஆட்சி மிகப்பெரிய தோல்வியை சந்தித்திருப்பதால் பாஜக நாட்டின் பல இடங்களில் மோசமான வன்முறையில் ஈடுபடுள்ளதாக சுட்டிக்காட்டிய அவர் கேரளா மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் நடைபெற்ற சம்பவங்களை மேற்கோள் காட்டினார்.
இதேபோல் தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் இதுவரை 85 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 12000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதா அமைச்சர் கூறியுள்ள சூழலில் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து டெங்கு பரவாமல் தடுக்க வேண்டும் எனவும் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி நிர்வாகம் இல்லாததே தமிழகத்தில் டெங்கு பரவ காரணம் எனவும் குறை கூறினார்.தொடர்ந்து பேசிய ஜி.ராமகிருஷ்ணன்,கோவை மக்கள் மீது கூடுதல் வரி என்ற பெயரில் மாநகராட்சி நிர்வாகம் தாக்குதலை தொடுத்துள்ளது என்றும் மாநகராட்சிக்கென நியமிக்கப்பட்டுள்ள தனி அதிகாரி தனி தனி வரி விதிப்பை கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தியதுடன், இல்லை என்றால் தொடர் போராட்டம் நடத்தப்படும் எனவும் குறிப்பிட்டார்.
- அருள்