திருச்சியில் பார்க்கவகுல முன்னேற்ற சங்க மாநில தலைமை அலுவலக திறப்பு விழா திருச்சி புத்தூர் கஸ்தூரிபுரத்தில் இன்று நடந்தது. அலுவலகத்தை இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனத் தலைவர் பாரிவேந்தர் எம்.பி. இன்று திறந்து வைத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் .
அப்போது அவர் கூறியதாவது; “தமிழகம் முதல் உத்திரபிரதேசம் வரை எந்தந்த ஜாதி கட்சியுடன் சேர்ந்து வெற்றி பெறலாம் என்று தான் கட்சிகள் செயல்படுகிறது. விரைவில் திருச்சியில் மாநாட்டை நடத்தி எங்களது கட்சியின் வலிமையை காட்டுவோம். பெரம்பலூரில் 3 வருட காலத்தில் செய்துள்ள நலத்திட்டங்களை குறித்து புத்தகமாக வெளியிட உள்ளேன். பெரம்பலூரில் ரயில் பாதை அமைப்பதற்கு தொடர்ந்து மத்திய அரசிடன் கோரிக்கை வைத்துள்ளேன்.
மோடி என் பங்காளி அல்ல. அண்டை வீட்டுக்காரர் அல்ல, நாடு வளர வேண்டும் என நாட்டு மீது பற்று கொண்டவர். உழைக்கும் எண்ணம் கொண்டவர். சிறுபான்மையினருக்கு எதிரானவர் என தவறாக கட்டமைக்கும் தமிழகம் சிந்தனை மாறும். விரைவில் தமிழகத்தில் அவரை ஏற்று கொள்வார்கள். மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையில் தவறில்லை. நமது விருப்பத்திற்காக கல்வி வைக்க கூடாது. போட்டி தேர்வை எதிர்கொள்ள அடிப்படை கல்வி தகுதி வளர்த்து கொள்ள வேண்டும்.
எந்த கொள்கையாக இருந்தாலும், மாணவர்களுக்கு கஷ்டமாக இருந்தாலும் பயன் படுத்த வேண்டும். நீட் தேர்வை ஏற்றுக் கொள்ள வேண்டும். ஏழை, கிராம மாணவர்கள் என கூற கூடாது” இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் மாநில அமைப்புச் செயலாளர் பன்னீர்செல்வம், மாவட்ட தலைவர் அன்பு துரை, ஐ.ஜே.கே மாவட்ட தலைவர் ரகுபதி, நிர்வாகிகள் கனகராஜ், செல்வகுமார் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.