திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி நகரை அடுத்துள்ளது சேவூர் கிராமம். அங்குள்ள மேல்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறான் ராட்டினமங்கலத்தை சேர்ந்த மாணவன் முரளி. (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இந்நிலையில், அதே கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவிகள் இருவர் மீது கடந்த செப்டம்பர் 21ஆம் தேதி மாலை இந்த மாணவன் சிகரெட் பிடித்து புகை ஊதியதாக கூறப்படுகிறது. அந்த மாணவிகள் வீட்டுக்கு செல்லாமல் பள்ளிக்கே திரும்ப வந்து வகுப்பு ஆசிரியரிடம் தகவல் சொல்லியுள்ளனர். மறுநாள் செப்டம்பர் 22ஆம் தேதி ஆசிரியர்கள் வெங்கட்ராமன், திலீப்குமார், நித்தியானந்தம், பாண்டியன் ஆகியோர் ஸ்டாஃப் ரூம்க்கு அழைத்து விசாரித்தபோது, ஆசிரியர்களிடம் வாக்குவாதம் செய்துள்ளான். இதனால் கோபமாகி இரண்டு ஆசிரியர்கள் அவனை அடித்ததாகவும், இரண்டு ஆசிரியர்கள் எச்சரித்து, ‘போய் உங்க அப்பாவை அழைச்சிக்கிட்டுவா’ன்னு சொல்லியதாகவும் கூறப்படுகிறது.
தனது பெற்றோருடன் ஆரணி அரசு மருத்துவனைக்கு சென்று ஆசிரியர்கள் அடித்துவிட்டார்கள், நெஞ்சுவலி என மருத்துவமனையில் உள்நோயாகியாக அட்மிட்டாகியுள்ளார். இது பற்றி ஆரணி தாலுக்கா காவல்நிலையத்தில் புகார் தந்துள்ளனர். காவல்துறை, கல்வித்துறை அதிகாரிகள் பள்ளியில் வந்து விசாரணை நடத்தியுள்ளனர். மாணவனுக்கு ஆதரவாக குறிப்பிட்ட கட்சி நிர்வாகிகள் வந்துள்ளனர். சாதி பெயரை சொல்லி மாணவனை ஆசிரியர்கள் அடித்துள்ளார்கள், ஆசிரியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கலைன்னா சாலைமறியல் செய்வோம் எனச்சொல்லியதாக கூறப்படுகிறது.
ஆசிரியர்கள் மாணவனை அடித்தார்களா என சக மாணவர்களிடம் விசாரித்த கல்வித்துறை அதிகாரிகள் முதல்கட்டமாக, நான்கு ஆசிரியர்களில் இருவரை சஸ்பென்ட் செய்துள்ளனர், இருவரை பணியிடமாற்றம் செய்துள்ளனர். இந்தத் தகவல் ஆரணியை தாண்டி பொதுமக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்திவிட்டது. தவறு செய்த மாணவன் மீது நடவடிக்கை எடுக்கவிடாமல் சாதி பெயரை சொல்லி தடுப்பது சரியா? கேள்வி எழுப்பிய ஆசிரியர்களை சஸ்பென்ட், இடமாறுதல் செய்தது தவறு என்கிற வாதம் எழுந்தது. ஆசிரியர் சங்கங்களும் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தினர்.
அக்கிராம மக்களில் சிலர், முதல் லாக்டவுன் முடிந்து 10, 11, 12 ஆம் வகுப்பு பிள்ளைகளுக்கு மட்டும் பள்ளி நடந்தபோது, இரண்டு மாணவர்களுக்குள் அடிதடியாகி இதே மாணவன், மற்றொரு மாணவனை காம்பஸால் குத்தியது பிரச்சனையானது. சக மாணவர்களுக்கு கூல்லிப், சிகரெட், ஹான்ஸ் விற்பனை செய்கிறான் என சகமாணவர்கள் ஆசிரியர்களிடம் புகார் சொல்லியுள்ளார்கள். சில வாரங்களுக்கு முன்பு பள்ளி வாசலில் பிறந்தநாள் கேக் வெட்டி இவனும், இவனது நண்பர்களும் பள்ளிக்கு வந்த சக மாணவ – மாணவிகள் மீது பூசினார்கள். இதுயெல்லாம் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருந்தார்கள். மாணவனின் சேட்டை குறித்து மாணவனின் தந்தையிடம் இதுவரை நான்கு முறை புகார் சொல்லியும் அவர் கண்டுகொள்ளவில்லை என்கிறார்கள்.
இதுகுறித்து மாணவன் தரப்பில் பேசியபோது, நான்கு ஆசிரியர்கள் மாணவனை அழைத்து சாதி பெயரை சொல்லி அடித்துள்ளார்கள். இதே ஆசிரியர்கள் ஒடுக்கப்பட்டசாதியை சேர்ந்த மாணவிகளின் தலையில் கொட்டியுள்ளார்கள். புத்தக பையை சோதனை செய்து மற்ற மாணவர்கள் முன்னால் அசிங்கப்படுத்தியுள்ளார்கள். இதற்கெல்லாம் காரணம், சம்மந்தப்பட்ட மாணவர் ஹேர்ஸ்டைல் டிபரன்டாக இருந்துள்ளது அது குறித்து கேள்வி கேட்ட பள்ளியின் உதவி தலைமையாசிரியரை எதிர்த்து பேசியுள்ளான். அதற்காக அவனை அடித்துள்ளார். என்மகனை எப்படி அடிக்கலாம், ஏதாவது தவறு செய்தால் என்னிடம்தானே சொல்லனும் என அவனது அப்பா கேட்டுள்ளார். இதில் முன்விரோதம் வைத்துக்கொண்டு நான்கு ஆசிரியர்களை ஏவியுள்ளார். அந்த ஆசிரியர்களும் சாதி ரீதியாக பேசி, அவமானப்படுத்தியுள்ளார்கள். கல்வித்துறை அதிகாரிகள் விசாரித்தே நடவடிக்கை எடுத்தார்கள். இப்போது அந்த சிறுவன் மீது பொய்யான புகார்களை மற்ற சாதியினர் பரப்புகிறார்கள். அவன் கொஞ்சம் சேட்டை செய்பவன்தான், அதற்காக அவனை பெரிய குற்றவாளிபோல் சித்தரிக்கிறார்கள் என்றார்.
இது குறித்து நம்மிடம் பேசிய ஆசிரியர் சங்க நிர்வாகிகள் சிலர், பள்ளிக்கு ஒழுங்காக வராமல், தவறான பழக்கவழக்கங்களை கற்றுக்கொண்டு வந்து சக மாணவர்களை சீரழிக்கும்போது அதனை ஆசிரியர்கள் கேள்வி எழுப்பக்கூடாதா?, என்பிள்ளையை எப்படி அடிக்கலாம்னு கேள்வி கேட்கும் பெற்றோர், ஏன்டா தப்பு செய்யறன்னு பிள்ளையை கேட்கறதில்லை. இந்த விவகாரத்திலும் புகார் சொன்ன அந்த மாணவியை வரச்சொல்லுன்னு கேட்கறாங்க. கேள்வி கேட்ட ஆசிரியர்கள் மீதே சாதியை பற்றி பேசினார்கள் என புகார்தரும் பெற்றோர்கள் அந்த மாணவிகள் மீது என்னன்ன குற்றம்சாட்டுவாங்க. எதுக்கு தனி ரூம்ல வச்சி விசாரிக்கனம்னு கேட்கறாங்க, எல்லா பிள்ளைகள் முன்னாடியும் வச்சி விசாரிச்சா அதையும் தப்புன்னு சொல்லுவாங்க, நாங்க என்னங்க செய்யறது என கேள்வி எழுப்பினார்கள்.
கல்வித்துறை அதிகாரிகளோ, பள்ளியில் மாணவர்களை அடிக்ககூடாது என்கிற சட்டம் உள்ளது. ஆசிரியர்கள் மாணவர்களை அடித்தாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அதனால் நடவடிக்கை எடுத்தோம் என்கிறார்கள்.
இந்நிலையில் செப்டம்பர் 26ஆம் தேதி அப்பள்ளி மாணவ – மாணவிகள் நூற்றுக்கும் அதிகமானவர்கள் மற்றும் பெற்றோர்கள் சிலர், ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுத்தது போல், தவறு செய்த மாணவன் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கேட்டு ஆரணி டூ வேலூர் சாலையில் சேவூரில் சாலைமறியல் செய்தனர். காவல்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் வந்து சமாதானம் செய்து விசாரிக்கிறோம் எனச்சொல்லி மறியலை கைவிட செய்தனர்.
இது ஆரணி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.