புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்களைக் குறி வைத்து கஞ்சா மற்றும் போதைக்கான ஊசி, மாத்திரைகள் விற்பனை அதிகரித்துள்ளது. இதனால் மாற்றுப் போதைக்கு ஏராளமான இளைஞர்களும், மாணவர்களும் தள்ளப்பட்டுள்ளனர். இதனால் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள், விபத்துகளும் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் தான் மாவட்ட எஸ் பி வந்திதா பாண்டே உத்தரவின் பேரில் உதவி ஆய்வாளர்கள் பாலமுருகன், மாரிமுத்து ஆகியோர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு படையினர் மாவட்டம் முழுவதும் சென்று ஆய்வு செய்து கஞ்சா விற்பனை கும்பலை கைது செய்து வருகின்றனர்.
ஜூலை 8- ஆம் தேதி திங்கள் கிழமை புதுக்கோட்டை கணேஷ் நகர் காவல் சரகம் காந்தி நகர் 6-ம் வீதி சுந்தராசு மகன் சுதர்சன் (எ) விஜய் (வயது 23) என்பவர் ஆலங்குடி ரோடு அசோக் நகர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யும் போது கைது செய்து 250 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
அதேபோல ஜூலை 9- ஆம் தேதி கணேஷ் நகர் காவல் சரகம் காமராஜபுரம் 26- ம் வீதியில் ஒரு வீட்டின் அருகே மாணவர்களிடம் கஞ்சா விற்பனை செய்த அதே பகுதியை சேர்ந்த முருகேசன் மகன் ஜெகன், ஜெகன் மனைவி பானுமதி, ஜெகன் தந்தை முருகேசன் ஆகியோரை கைது செய்த சிறப்பு படை போலிசார் வீட்டில் சோதனை செய்த போது 3 கிலோ கஞ்சா, போதைக்கான மாத்திரைகள், 3 செல்போன்கள், கஞ்சா பொட்டலம் போட வைத்திருந்த கவர்கள், எடை போடும் சிறிய தராசு, கத்தி, மோட்டார் சைக்கிள், ரூபாய் 210 பணக் ஆகியவற்றையும் கைப்பற்றி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன், மனைவி, தந்தை என அனைவருமே மாணவர்கள், இளைஞர்களைக் குறி வைத்து கஞ்சா மற்றும் போதைக்கான மாத்திரைகள் விற்பனை செய்து சிக்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதே போல புதுக்கோட்டை நகரில் உள்ள பல கஞ்சா வியாபாரிகளையும் கைது செய்ய வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.