முகத்தில் நீதி என எழுதி போராட்டம்
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் உள்ள ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை எம்ஜிஆர் மருத்துவக்கல்லூரி நிர்வாகத்துடன் இணைக்க வேண்டும். அரசு மருத்துவ கல்லூரிகளில் வசூலிக்கும் கல்வி கட்டணத்தையே இங்கேயும் வசூலிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ராஜா முத்தையா மருத்துவ கல்லூரியில் படிக்கும் இளநிலை, முதுநிலை மாணவர்கள் 700க்கும் மேற்பட்டடோர் கடந்த 36 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
போராட்டத்தில் கல்லூரி நிறுவனரின் சிலையின் முன்பு அமர்ந்து கோரிக்கையை கூறுவது, காந்தி முகமூடியை அனிந்து கொண்டு போராட்டம், நீதி வேண்டும் என்று தரையில் எழுதி அதில் மாணவர்கள் பகல் முழுவதும் நின்று போராட்டம் என பல்வேறு விதமான நூதன போராட்டங்களை இரவு பகல் பாராமல் செய்து வருகிறார்கள். மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்து பல்வேறு அரசியல் கட்சிகள் போராட்டங்களை அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் 36வது நாளான புதன் கிழமை மாணவர்கள் முகத்தில் நீதி என்று எழுதி கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் எங்களுக்கு நீதி கிடைக்கும் வரை போராட்டத்தை கைவிடமாட்டோம். எங்களின் வெற்றிகாக எந்த எல்லைக்கும் செல்ல தயார உள்ளோம் என்கிறார்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள்.
-காளி