சென்னையில் நேற்று குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக போராடியவர்கள் மீது போலீசார் தடியடி நடத்திய சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்றைய இரவு முதல் தமிழகம் முழுக்க தொடர்ந்து பல்வேறு ஊர்களில் போராட்டங்கள் நடந்து வருகிறது.
இன்று ஈரோடு மாவட்டத்திலும் பல இடங்களில் சாலை மறியல், கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடந்தது. இன்று காலை ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் அருகே பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் திரண்டு வந்தனர். பெண்கள் கூடுதலாகவே இருந்தனர். அவர்கள் குடி உரிமை சட்டத்தை திரும்பப்பெற வேண்டும், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராடியவர்கள் மீது கண்மூடித்தனமாக தடியடி நடத்தி அத்துமீறிய போலீசாரை உடனே கைது செய்ய வேண்டும் என்று கோஷம் எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தவ்ஹீத் ஜமாத் எஸ்டிபிஐ கட்சி உட்பட முஸ்லிம் அமைப்பினர் கலந்து கொண்டனர். நூற்றுக்கணக்கான போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். திடீர் போராட்டம் முற்றுகையாக மாறியது. நீண்ட நேரத்திற்கு பிறகு போராட்டகாரர்கள் கலைந்து சென்றனர். ஈரோடு மட்டுமல்லாது பவானி, அந்தியூர், கோபி, பெருந்துறை, சத்தியமங்கலம் என மாவட்டத்தின் அனைத்து ஊர்களிலும் போலீஸ் நடத்திய தடியடியை கண்டித்து திடீர் திடீரென பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் குதித்து வருகிறார்கள்.
குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை திரும்பப் பெறக்கோரித்தான் ஜனநாயக முறையில் மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிராக மக்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள். இதில் சென்னையில் போலீசார் மக்கள் குறிப்பாக பெண்கள் மீது தடியடி நடத்தி அராஜகம் செய்தது. இந்தியா முழுக்க கவனத்தை ஈர்த்துள்ளது.