கரோனா வைரஸ் தொற்றில் இந்திய அளவில் அபாய குறியாக அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் ஒன்று ஈரோடு. இந்த வைரஸ் தொற்று தொடக்க நிலையிலேயே ஈரோடு மாவட்டத்தில் அதிக நபர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியதால்தான் இந்திய அளவில் ஈரோடு மிகவும் பாதுகாக்கப்படவேண்டிய நகரமாக மத்திய அரசு அறிவித்தது.
இந்த நிலையில் தொடர்ந்து இந்த வைரஸ் தொற்று அதிகரித்து வர தற்போது ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 60 பேருக்கு இந்த வைரஸ் தொற்று உறுதியானது. இதில் ஒருவர் இறந்தார், மற்ற அனைவரும் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில் மொத்தம் சிகிச்சையில் உள்ள 150 பேரில் இன்று 13 நபர்கள் பூரண சிகிச்சை முடிந்து, நலம் பெற்றுள்ளனர். இன்று அவர்களை வீட்டிற்கு அனுப்பும் நிகழ்வு நடைபெற்றது.
இதில் மாவட்ட ஆட்சியர் கதிரவன், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சக்தி கணேசன், மாவட்ட பொது சுகாதாரத்துறை துணை இயக்குனர் திருமதி சவுண்டம்மாள் ஆகியோரும், அரசுத்துறை அலுவலர்களும் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டனர். வீடு திரும்பும் 13 பேருக்கும் பூங்கொத்து கொடுத்து அனுப்பி வைத்தார்கள். கரோனா வைரஸ் தொற்று அதிகமுள்ள பகுதி என பேசப்பட்ட ஈரோடு மாவட்டத்தில், இந்த வைரஸ் தொற்றிலிருந்து குணமாகி, நலம் பெற்று வீடு திரும்புபவர்கள் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கும் என நம்பிக்கையுடன் கூறுகின்றனர் மருத்துவர்கள்.