திருச்சி மாவட்ட புதிய ஆட்சியராக சிவராசு ஐ.ஏ.எஸ். இன்று (19.05.2021) பொறுப்பேற்றுக்கொண்டார். அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், “தற்போது திருச்சி மாவட்டத்தைப் பொறுத்தவரை இறப்பு விகிதத்தைக் குறைப்பதுதான் முதல் பணியாக நாங்கள் கையில் எடுத்துள்ளோம். தினமும் 6 ஆயிரம் பேருக்கு நோய் தொற்று பரிசோதனை நடத்தப்பட்டுவருகிறது. அதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெறும். இந்தப் பரிசோதனையின் மூலம் 24 மணி நேரத்தில் நோயாளியைக் கண்டறிந்து அவர்களை உடனடியாக பாதுகாத்து, உரிய சிகிச்சை அவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். தடுப்பூசிகள் எண்ணிக்கை விரைவில் அதிகப்படுத்தப்படும்.
இவை எல்லாவற்றையும்விட மிக முக்கியமான நோய்த் தடுப்பு என்றால் முகக்கவசம் அணிவது, தனிநபர் இடைவெளியில் இருப்பதுதான். பொது மக்களும் இந்த விழிப்புணர்வோடு இருந்தால் நோய் அதிகரிப்பைத் தடுக்கலாம்.
மிதமான நோய்த் தொற்று பாதிக்கப்பட்ட நோயாளிகள் தனியார் மருத்துவமனைகளுக்குச் செல்லும்போது அவர்களுக்கான படுக்கை வசதி இல்லை என்று கூறுவதும் கடைசி நேரத்தில் இறக்கும் தருவாயில் அவர்களை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைப்பதும், அதிகக் கட்டணம் வசூலிப்பதும் தொடர்பான புகார்கள் வருகின்றன. இப்படிப்பட்ட புகார்கள் வந்தால் குறிப்பிட்ட அந்த தனியார் மருத்துவமனை மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.