அண்மைக்காலமாகவே தெருநாய்களால் சிறுவர்கள், பொதுமக்கள் தாக்கப்படும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக கேரளாவில் இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.
அண்மையில் கேரள மாநிலம் கோழிக்கோடு அறைகிணறு பகுதியில் சிறுவனைத் தெருநாய்கள் கடித்து குதறும் பதறவைக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதேபோல் சமூக வலைத்தளங்களில் வெளியான மற்றொரு வீடியோவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதேபோல் கேரளாவில் நீதிபதி ஒருவரையே தெருநாய்கள் கடித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. கேரள மாநிலம் பத்தனம்திட்டா பகுதியில் வெட்டிபுரம் என்ற இடத்தில் உள்ள நீதிபதிகள் குடியிருப்பில் வசித்துவந்த நீதிபதி ஒருவர் வழக்கம்போல் நடைப்பயிற்சி மேற்கொண்டார். அப்பொழுது அங்கு இருந்த தெருநாய்கள் ஓட ஓட அவரை துரத்தி சென்று கடித்தது. இதில் நீதிபதியின் பாதுகாவலர், நீதிபதி ஆகியோருக்கு காயம் ஏற்பட்ட நிலையில் இருவரும் பத்தனம்திட்டா அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இந்நிலையில் கேரள மாநிலத்தில் சிற்பி ஒருவர் மரத்தின் மீது ஏறி தெருநாய்கள் தொல்லை இருப்பதால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நூதன முறையில் போராட்டம் நடத்தினார். கேரள மாநிலம் கண்ணூரில் சுரேந்திரன் என்ற சிற்பி தெரு நாய்களை கட்டுப்படுத்தக்கோரி மரத்தின் மீது ஏறி தனது கையை நாய் சங்கலியால் கட்டிக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டார். தெரு நாய்கள் தொல்லையால் நான் மரத்தில் ஏற கற்றுக்கொண்டேன். பொதுமக்கள் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷம் எழுப்பினார்.