மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டத்தை எதிர்த்து நாகப்பட்டினம் அவுரித் திடலில் ‘விவசாயிகளின் விரோதி மோடி’ என்ற முழக்கத்துடன் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இப்போராட்டத்திற்கு எஸ்.டி.பி.ஐ. கட்சியின் நாகை மாவட்டத் தலைவர் பைசல் ரஹ்மான் தலைமை தாங்கினார். மாவட்டப் பொதுச்செயலாளர் பாபுகான் தொகுத்து வழங்கினார்.
போராட்டத்தில் வி.சி.க. கட்சியின் மாவட்டச் செயலாளர் கதிர் நிலவன், விவாசய நலசங்கப் பொறுப்பாளர் காவேரி தனபால் உள்ளிட்டோர் கலந்துகொண்டு கண்டனம் தெரிவித்துப் பேசினர்.
ஆர்பாட்டத்தில் பேசிய எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாவட்டத்தலைவர் பைசல் ரஹ்மான், “வேளாண் திருத்தச் சட்டம் ஒட்டுமொத்த விவசாயத்தையும் குழிதோண்டிப் புதைக்கும், விவசாயிகளைக் கார்ப்ரேட்டுகளின் கைப்பிடியில் சிக்க வைத்து நசுக்கும் என தொடர்ந்து 40 நாட்களுக்கு மேலாக டெல்லியில் உயிரைக் கொடுத்து போராடி வருகின்றனர் விவசாயிகள். ஆனால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மோடி அரசோ சர்வாதிகாரப் போக்கை கடைபிடிக்கும் வகையில் கார்ப்ரேட்டுகளின் கைகூலியாகவும், விவசாயிகளின் விரோதியாகவும் மாறி விவசாயிகளின் கோரிக்கையை ஏற்க மறுத்து உதாசீனப்படுத்தி வருகின்றனர்.
தமிழகத்தை ஆளும் அ.தி.மு.க. அரசின் முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள் இச்சட்டத்தை எதிர்க்கக் கூட வேண்டாம், ஆதரிக்காமல் இருந்தாலே போதும். ஆனால், இந்தச் சட்டம் நன்மை பயக்கும் என வெளிப்படையாகவே பேசுவது வெட்கக்கேடானது. தான் ஒரு விவசாயி என்பதை இனி எடப்பாடி பழனிசாமி பயன்படுத்தக்கூடாது” என்று பேசி முடித்தார்.
விவசாய சங்கத் தலைவர் காவிரி தனபாலன், “இந்தச் சட்டம் மிக மிக அபாயகரமானது என்பதை உணர்ந்தே விவசாயிகள் டெல்லியில் போராடி வருகிறனர். டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக நித்தம் ஒரு போராட்டத்தை நாங்கள் வீதிக்கு வீதி நடத்திக்கொண்டிருக்கிறோம். ஆனால், அ.தி.மு.க. அரசோ போராடுபவர்கள் விவசாயிகள் அல்ல, இடைத்தரகர்கள் என்று கூறிவருகிறது. இது வேதனை அளிக்கிறது” என்று பேசினார்.