Skip to main content

திண்டுக்கல்லில் 500-க்கும் மேற்பட்டோர் கைது!

Published on 28/03/2022 | Edited on 28/03/2022

 

Stir in Dindigul! More than 500 arrested!

 

திண்டுக்கல்லில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார் மயமாக்கக் கூடாது, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் தொழிற்சங்கத்தினர் வங்கி ஊழியர்கள் இரண்டு நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

தமிழகத்திலும் இந்தப் போராட்டத்தில் அண்ணா தொழிற்சங்கத்தைத் தவிர அனைத்து தொழிற்சங்கத்தினரும் ஈடுபட்டுள்ளனர். மேலும், அவர்கள் பல்வேறு இடங்களில் மத்திய அரசைக் கண்டித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். திண்டுக்கல்லில் உள்ள தலைமை தபால் அலுவலகம் முன்பு சி.ஐ.டி. மாவட்ட தலைவர் கணேசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் நடைபெற்றது. இந்த மறியலில் ஈடுபட்ட 50 பெண்கள் உட்பட 250 பேரை போலீசார் கைது செய்தனர். 

 

அதேபோல் அலுவலக பணியாளர்கள் முன்னேற்றச் சங்கத்தின் பொதுச் செயலாளர் ராஜேந்திரகுமார் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் மறியல் போராட்டத்தில் கலந்து கொண்டனர். திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதுபோல் வட மதுரை ரயில் நிலையம் செல்லும் சாலையில் கனரா வங்கி முன்பு சிஐடி மாவட்ட துணைத்தலைவர் பிச்சைமுத்து தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட 38 பேரை போலீசார் கைது செய்தனர். 

 

பொது வேலை நிறுத்தத்தையொட்டி சாணார்பட்டி ஒன்றியம் அருகே நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு சிஐடியு ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் ராஜா தலைமை தாங்கினார். இதில் வாலிபர் சங்க ஒன்றிய செயலாளர் சிலம்பரசன், பொருளாளர் குமார், சிபிஎம் ஒன்றிய செயலாளர் நெல்லை கண்ணன் உள்பட 70க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதேபோல் கோபால்பட்டியில் நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் பெருமாள் தலைமை தாங்கினார். மாதர் சங்க ஒன்றிய செயலாளர் பாப்பாத்தி சிபிஎம் ஒன்றிய குழு உறுப்பினர் சரவணன் கோபால் சின்னராஜ் மற்றும் 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்தனர். இப்படி திண்டுக்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மறியலில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபங்களில் தங்கவைத்து இருக்கிறார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்