ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலை அனுமதி தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அரசாணையாக வெளியிட்டது தமிழக அரசு.
தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா வெளியிட்டுள்ள அரசாணையில், "ஸ்டெர்லைட் ஆலையைக் கண்காணிக்க தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. கண்காணிப்பு குழுவின் உறுப்பினர்களாக தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி., சார் ஆட்சியர், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர், ஆக்சிஜன் தொழிற்சாலை குறித்த தொழில்நுட்ப அறிவு சார்ந்த அரசு அதிகாரி, உச்ச நீதிமன்றம் நியமித்த இரண்டு சுற்றுச்சூழல் நிபுணர்கள் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். ஸ்டெர்லைட் ஆலை குறித்து இரண்டு வாரத்துக்கு ஒருமுறை அறிக்கை அளிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலை ஜூலை 31ஆம் தேதி வரை இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது." இவ்வாறு அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு அரசாணை வெளியிட்டதைத் தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையில் விரைவாக ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.