தேசப் பிதாவின் சிலை அவமதிப்பு சேதம்!
உரசினால் பற்றிக் கொள்ளும் சென்சிட்டிவ்வான மாவட்டம் நெல்லை. மாவட்டத்தின் நகரம் தொடங்கி குக்கிராமங்கள் வரையிலும் சமூகம் சார்ந்த தலைவர்களின் சிலைகள், அவரவர் சமுதாயம் சார்பில் வைக்கப்பட்டுள்ளன.
சில வேளைகளில் அந்தத் தலைவர்களின் சிலைகள் சமூக விரோத சத்திகளால் சேதப்படுத்தப்பட்டு அதன் எதிரொலியாய் தொடர்புடைய பகுதிகளில் பதட்டம் நிலவுவதும், சமூகம் சார்ந்த மக்களின் கொந்தளிப்பும் ஏற்பட்டதுண்டு. அதனைத் தவிர்க்க வேண்டி, காவல்துறை சார்பில் கிராமங்கள் நகரங்கள் என்று மாவட்டத்திலிருக்கும் சமூகத் தலைவர்களின் சிலைகளுக்கு பாதுகாப்பாக சுற்றுச் சுவரோ அல்லது இரும்புக் கம்பிகள் கொண்டு வளையம் அமைத்து சேதப்படுத்தப்படாத வகையில், அமைத்துப் பாதுகாக்க வேண்டும் என்கிற கண்டிப்பான அறிவிப்பின்படி. நெல்லை மாவட்டத்தில் மட்டுமல்லாது தென் மாவட்டத்தில் பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டதால் சேதச்சம்பவங்கள் தடுக்கப்பட்டன.
இந்த நிலையில் நெல்லை மாவட்டத்தின் பாவூர்சத்திரம் அருகே வெங்கடாம்பட்டியில் தேசப்பிதா மகாத்மா காந்தியின் சிலை சேதப்படுத்தப்பட்டு அவமானப்படுத்தப்பட்டது அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது.
வெங்கடாம்பட்டி கிராமத்திலிருக்கிறது டிரஸ்ட் இந்தியா நர்சரி பிரைமரி பள்ளி. இந்தப் பள்ளியின் முன்பாக தேசப்பிதா மகாத்மா காந்தியின் சிலை நிறுவப்பட்டு, முடியும் நிலையில் வர்ணம் பூசும் தருணத்திலிருந்தது. அதோடு காந்தி சிலை திறப்பு விழாவிற்கும் நாள் குறித்தாகி விட்டதாம். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போன்று பள்ளி கேட்டின் உள்பக்கமாக கதவை மூடி விட்டு காவலாளி பிரமுத்து என்பவர் காவலுக்கு இருந்திருக்கிறார்.
நள்ளிரவில் பள்ளி வளாகத்திற்குள் நுழைந்த மர்ம நபர்கள் சிலர், தேசப்பிதா காந்தியின் சிலையின் கழுத்து, முகம் மற்றும் பின்புறத் தோள் பகுதியை உளி கொண்டு சேதப்படுத்தியுள்ளனர். இந்த சப்தம் கேட்டு காவலாளி பிரமுத்து கூச்சலிடவே தப்பிய மர்ம நபர்கள் போகிற போக்கில் அங்கு நின்றிருந்த பள்ளியின் ஆம்புலன்சின் கண்ணாடியையும் சேதப்படுத்திவிட்டுத் தப்பியிருக்கிறார்கள்.
இது குறித்து பள்ளி நிர்வாகத்தின் புகாரின் பேரில் கடையம் போலீசார் விசாரணை நடத்தி மர்ம நபர்களைத் தேடி வருகிறார்கள்.
தேசப்பிதா மகாத்மா காந்தியின் சிலை சேதப்படுத்தப்பட்டு அவமானப்படுத்தப்பட்டது அதிர்வைக் கிளப்பியிருக்கிறது.
செய்தி : படங்கள் : ப.இராம்குமார்