திருச்சி மாவட்ட விவசாயிகள், மணல் மாட்டு வண்டி தொழிலாளர் சங்கத்தின் சார்பில் 100-க்கும் மேற்பட்டோர் திருச்சி நொச்சியம் பகுதியில் உள்ள மாங்குடிமங்கலம் மணல் ரீச் பகுதியிலும் அதேபோல் லால்குடி பகுதியில் உள்ள தாழக்குடி மணல் ரீச் பகுதியிலும் மாட்டு வண்டிகள் மூலம் காவிரி ஆற்றில் மணல் அள்ளி வந்தனர். இந்நிலையில், பொங்கல் பண்டிகையைக் காரணம் காட்டி கடந்த 10 நாட்களாக மணல் ரீச் மூடப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளை நேரில் சந்தித்து மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால், இன்று காலை திருச்சி சுப்பிரமணியன்புரம் பகுதியில் உள்ள பொதுப்பணித்துறை கனிம மற்றும் கண்காணிப்பு உட்கோட்ட உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் இதுகுறித்து பேசுகையில், “மணல் ரீச்சை நம்பி 2400 மாட்டு வண்டிகள் மூலம் மணல் அள்ளும் தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்கள் உள்ளன. இந்நிலையில், நீதிமன்ற உத்தரவைக் காரணம் காட்டி தற்போது பொதுப்பணித்துறை அதிகாரிகள் மணல் ரீச்சை மூடிவிட்டனர். இதனால் 2,400 குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, லாரிக்கு வடுககுடி, புத்தூர் ஆகிய இரண்டு இடங்களில் மணல் அள்ள அனுமதி வழங்கப்பட்டு லாரிகளில் மணல் அள்ளப்படுகிறது. இச்செயல் நீதிமன்ற உத்தரவையும் மீறி செயல்படுத்தப்படுகிறது. நாங்கள் இயந்திரங்கள் பயன்படுத்தாமல் மனிதர்களைக் கொண்டு மணல் அள்ளுகிறோம். ஆனால், அதிகாரிகள் எங்களுக்கு சரியாக பதில் அளிப்பதில்லை. அதிகாரிகள் இப்படியே மௌனம் சாதித்தால் குடும்பத்துடன் வந்து நீர்வளத்துறை அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம்” எனத் தெரிவித்தனர்.