இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு இதுநாள் வரை அரசு ஒதுக்கியிருந்த வீட்டை காலி செய்ய கூறி நோட்டீஸ் விட்டுள்ளதையொட்டி அவர் அரசு ஆணையை மதித்து வீட்டை காலி செய்து, வேறு வாடகை வீட்டிற்கு இடம் பெயர்ந்துள்ளார். இந்த செய்தி தமிழக மக்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் அவரது உறவினரும்,நலம்விரும்பியுமான ஐய்யாசாமி கூறுகையில்,
நல்லகண்ணு ஐயா 2006வது வருடம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் வீடு இல்லாமல் கஷ்டப்பட்ட சந்தர்ப்பத்தில் அரசாங்கத்திடமிருந்து வாங்கினார். இதுவரை 13 வருடங்கள் ஆகிறது. இவ்வளவு வருடமாக சரியான நேரத்தில் வாடகை செலுத்தி வருகிறார். தண்ணீர் வரி கட்டி வருகிறார். எந்த ஒரு குறையும் அவர் வைக்கவில்லை. இந்த வீட்டுக்காக கிட்டத்தட்ட அவர் 5 லட்சம் வரை செலவு செய்திருக்கிறார். முன் கேட் அமைப்பது காம்பவுண்ட் கட்டுவது போன்ற பணிகளுக்காக செலவு செய்திருக்கிறார். இவருடன் வீடு வாங்கியவர்கள் பாதிப்பேர் வெளியில் சென்று விட்டு வீட்டை வாடகைக்கு விட்டனர்.
சிலர் வீடுகளை டிராவல்ஸ் ஆஃபீஸாக மாற்றி உபயோகப்படுத்தி வந்தனர். ஆனால் இப்படிப்பட்ட நிலையில் நல்லகண்ணு ஐயா குடும்பத்திற்காக மட்டுமின்றி கட்சிக்காரர்கள், தொண்டர்கள் வந்தால் சந்திப்பதற்கான வீடாக வைத்திருந்தார். வீட்டை காலி செய்ய வேண்டும் என்று நோட்டீஸ் கொடுத்த போது அக்கம் பக்கத்தில் இருந்த வீட்டினர் கோர்ட்டில் ஸ்டே வாங்க கேஸ் போட்டார்கள். ஆனால் நல்லகண்ணு அய்யா மட்டும் அதுபோன்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவருடைய சொந்த வீடாக இருந்தால் எப்படி இருக்குமோ அதுபோலதான் அந்த வீட்டையும் பார்த்துக் கொண்டார்.
அவர் ஒரு அரசியல் கட்சித் தலைவர் என்பதைவிட சுதந்திர போராட்ட வீரர். அவருக்கு 92 வயதாகிறது இவ்வளவு வருடமாக இருந்து விட்டார். சமூகத்தில் நல்ல ஒரு எளிமையான மனிதர் என பெயரெடுத்தவர் இப்படி இருக்கும் நிலையில் இந்த வீடு நிலம் அரசுக்கு தேவைப்பட்டிருக்கிறது என்றால் வீட்டு வசதி வாரியத்தின் துணை கொண்டு மாற்று இடத்தை கொடுத்திருக்கலாம். அதை விட்டுவிட்டு வீட்டை காலி செய்யுங்கள் வெளியே போங்கள் என்று கேவலமாக தமிழ்நாடு அரசு நடந்து கொண்டு இருக்கிறது ரொம்ப வருத்தத்தை தருகிறது என்றார்.