மாநில சுயாட்சியை வென்றெடுக்க சனநாயக சக்திகளே அணிதிரள்வோம் விடுதலைச்சிறுத்தைகள் அழைப்பு
இந்திய ஆட்சி நிர்வாகம் இரண்டு வகையாக கட்டமைக்கப்பட்டு இயங்கி வருகிறது. இவை மையஅரசு மற்றும் மாநில அரசுகளாக இயங்குகின்றன. மைய அரசு என்பது மாநில அரசுகளின் ஒன்றிய அரசாகும். மைய அரசுக்குரிய அதிகாரங்கள் மற்றும் மாநில அரசுகளுக்குரிய அதிகாரங்கள் ஆகியவற்றை நமது இந்திய அரசியலமைப்பு சட்டம் வரையறை செய்துள்ளது. அத்துடன் மையஅரசும் மாநிலஅரசுகளும் இணைந்து கலந்தாய்வு செய்து முடிவெடுப்பதற்குரிய பொதுவான அதிகாரங்களையும் இந்திய அரசியலமைப்பு சட்டம் வரையறுத்துள்ளது.
இவ்வாறான அதிகாரப் பகிர்வில், மாநில அரசுகளுக்கென ஒதுக்கப்பட்ட அதிகாரங்கள் போதுமானவையாகவும் வலிமையானவை யாகவும் இல்லை என்பது யாவரும் அறிந்த உண்மையாகும். மையஅரசு வலிமை மிக்கதாக இருக்க வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால், மாநிலஅரசுகள் பலவீனமானவையாக இருப்பதும் தேசத்தின் வளர்சிக்கு ஏதுவானதாக இருக்க முடியாது.
மாநில அரசுகளின் வலிமை தான் மையஅரசின் வலிமையாக விளங்கும். இந்திய அரசியலமைப்பு சட்டமும் அதனடிப்படையில்தான் மையத்தில் அமைய வேண்டிய கூட்டாட்சி குறித்து விளக்குகிறது. மாநில அரசுகளின் ஒன்றிய அரசே மைஅயஅரசு என்பதுதான் கூட்டாட்சியின் அடிப்படையாகும். அதாவது, பல மாநிலஅரசுகள் ஒன்றிணைந்து தேசிய அளவில் கூட்டாக நடத்தும் ஆட்சி நிர்வாகமே மையத்தில் அமைய வேண்டிய கூட்டாட்சி முறையாகும். இதிலிருந்து, மாநிலஅரசுகளும் சுயமான ஆட்சி நிர்வாகத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்பதுதான் நாம் அறியவேண்டியதாகும்.
மாநிலங்கள் போதிய அதிகாரங்களுடன் சுயமான ஆட்சி நிர்வாகம் இல்லாமல் மையஅரசின் கட்டுப்பாட்டில் இயங்கினால், மையஅரசு தனித்த வலிமைமிக்க 'ஒற்றையாட்சி' நிரவாகமாக மட்டுமே இயங்கும். இது கூட்டாட்சி தத்துவத்திற்கு நேர் எதிரானதாகும்.
இந்திய அரசியலமைப்புச் சட்டம், மையத்தில் கூட்டாட்சி நிர்வாகம் அமைய வேண்டுமென வரையறுத்திருந்தாலும்,நடைமுறையில் மையஅரசானது ஒற்றையாட்சி தன்மைகளையே கொண்டு இயங்குகிறது. மாநிலஅரசுகளைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு ஆட்டிப் படைக்கிறது. மாநிலஅரசுகளுக்கான உரிமைகள் மற்றும் அதிகாரங்களை வழங்க மறுப்பதுடன், இருப்பனைவற்றையும் தட்டிப்பறிப்பதில் குறியாக இருக்கிறது.
அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பது சனநாயகத்தில் மிகமுக்கியமான பண்புக்கூறுகளில் ஒன்றாகும். மாறாக, அதிகாரங்களை ஒரே இடத்தில் குவிப்பது சனநாயகத்திற்கு எதிரான சர்வாதிகார போக்காக மாறும்.
தற்போதய சூழலில், இந்திய அரசு இத்தகைய அதிகாரக் குவிப்பை நோக்கி தீவிரமாக இயங்குகிறது. இன்று மாநில அரசுகள், எல்லாவற்றுக்கும் மையஅரசை நத்திக்கிடக்கும் நிலையே உள்ளது. மாநில சட்டமன்றங்களில் சட்டங்களை இயற்ற முடியாது; சட்ட மசோதாக்களை மட்டுமே நிறைவேற்ற முடியும். அவற்றுக்கும் மையஅரசு அல்லது குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்த பின்னரே அவை சட்டங்களாக மாறும்.
மாநில அரசுகள் தத்தமது மாநில சூழல்களுக்கு ஏற்ப கொள்கை முடிவுகளை எடுக்கவோ, சட்டங்களை இயற்றவோ இயலாது. நிதி,கல்வி, சட்டம்-ஒழுங்கு ஆகியவற்றில் மாநில அரசுகளுக்குள்ள குறைந்தபட்ச அதிகாரங்களையும் அண்மை காலத்தில் மையஅரசு பறித்துக்கொண்டது. குறிப்பாக, மாநிலஅரசுகள் 'வணிகவரி' 'விற்பனை வரி' உள்ளிட்ட ஒரு சில வரிவசூல் அதிகாரங்களைப் பெற்றிருந்தன. தற்போது, 'ஒருமுனை வரிவிதிப்பு' எனும் பெயரில் 'சரக்கு மற்றும் சேவை வரி' வசூலிக்கும் சட்டமியற்றி மாநிலஅரசுகளுக்கான வரிவசூல் அதிகாரங்களை முழுமையாக பறித்துக்கொண்டது.
அடுத்து, சட்டம்- ஒழங்கைப் பராமரிக்கும் வகையில் காவல்துறை அதிகாரங்கள் மாநில அரசுகளிடம் இருந்தாலும், சட்டம் ஒழங்கு பிரச்சனைகளில் நேரடியாக தலையிடுவதற்கேற்ற வகையில் 'தேசிய புலனாய்வு முகமை' ஒன்றை மையஅரசு உருவாக்கி உள்ளது. ஏற்கனவே, சிபிஐ, ஐபி போன்ற அமைப்புகள் சட்டம்-ஒழுங்கு பிரச்சனைகளில் தலையிடும் அதிகாரங்களை கொண்டுள்ளன. அதாவது, சட்டம்-ஒமுங்கைப் பராமரிக்கும் முழு அதிகாரங்களும் மாநில அரசுகளிடம் இல்லை.
அடுத்து, கல்வி தொடர்பான அதிகாரங்கள் பொதுப்பட்டியல் எனும் 'ஒத்திசைவு'பட்டியலில் இடம்பெற்றிருந்தாலும் அவற்றை முழுமையாக மையஅரசே பயன்படுத்திக்கொள்கிறது. அண்மையில், மாநிலஅரசுகளின் மீது திணித்துள்ள ' நீட்' தேர்வு அதற்கு ஒரு சான்றாகும்.
இவ்வாறு, மாநில அரசுகளுக்குப் போதிய அதிகாரங்களை வழங்காதது மட்டுமின்றி, நடைமுறயில் உள்ள ஒருசில அதிகாரங்களையும் மையஅரசு பறித்து வருகிறது. இதன்மூலம், மாநில அரசுகளைப் பலவீனப்படுத்தி, மையத்தில் அதிகாரங்களை குவித்து, கூட்டாட்சிக்கு வேட்டு வைத்து ஒற்றையாட்சி முறையை நிலைநாட்டுவதற்கு மையத்தில் ஆட்சியில் இருப்பவர்கள் துடிக்கின்றனர். இது இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானதாகும்.
எனவேதான், மையத்தில் உண்மையான கூட்டாட்சியை நிறுவவும் அதற்கேற்றவாறு மாநிலங்களில் சுயாட்சி நிர்வாகத்தை உருவாக்கவும் சனநாயகத்தைப் பாதுகாக்கவும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அனைத்து சனநாயக சக்திகளையும் ஒருங்கிணைக்கிற முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதன்அடிப்படையில் தான் செப்டம்பர்-21-2017அன்று சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாநில சுயாட்சி மாநாடு நடைபெறுகிறது.
இம்மாநாட்டில், திராவிட முன்னேற்ற கழகத்தின் செயல் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு க ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் சு. திருநாவுக்கரசர், கேரள முதல்வர் மாண்புமிகு பினராய் விஜயன், புதுவை முதல்வர் மாண்புமிகு வெ.நாரயணசாமி, திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர்கி.வீரமணி, இடதுசாரி கட்சிகளின் தலைவர்கள் தோழர் ஜி.இராமகிருஷ்ணன், தோழர் இரா. முத்தரசன், இசுலாமிய இயக்கங்களின் தலைவர்கள் பேராசிரியர் காதர்மொய்தீன், பேராசிரியர் ஜவாஹிருல்லா ஆகியோர் பங்கேற்று சிறப்புரை ஆற்றவுள்ளனர். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இம்மாநாட்டில் சனநாயக சக்திகள் அனைவரும் பங்கேற்று சிறப்பித்திட வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அழைப்பு விடுக்கிறது.