கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளது முடியனூர் கிராமம். இந்த ஊரின் ஊராட்சி மன்ற துணைத் தலைவராக உள்ளவர் ராஜேஸ்வரி. இவர் நேற்று மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிப்பதற்கு வந்திருந்தார். அவர் திடீரென மாவட்ட ஆட்சியர் காலில் விழுந்து கதறி அழுதார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ராஜேஸ்வரியை தடுத்து தூக்கி நிறுத்தினர். இதைக் கண்டு பதறிப்போன மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர், ராஜேஸ்வரியை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை செய்தார்.
அப்போது துணைத் தலைவி ராஜேஸ்வரி மாவட்ட ஆட்சியரிடம், கடந்த ஐந்தாம் தேதி எங்கள் முடியனுர் ஊராட்சி மன்ற தலைவர் இளங்கோவன் மற்றும் அவரது ஆதரவாளர்களும் எங்கள் வீட்டிற்கு வந்து தகராறு செய்ததோடு எனது ஆடைகளை கிழித்து அலங்கோலம் செய்தார். அவரைத் தடுக்க வந்த எனது கணவர், கணவரின் தம்பி மற்றும் உறவினர்களையும் ஆயுதங்களால் கடுமையான முறையில் தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த அவர்கள் அனைவரும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இது சம்பந்தமாக வரஞ்சரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளோம். அந்த புகார் மீது இதுவரை போலீசார் எந்த வித விசாரணையும் நடத்தவில்லை.
எனவே ஊராட்சி மன்ற தலைவர் இளங்கோவனால் எனக்கும் எங்கள் குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். அது சம்பந்தமான புகார் மனுவையும் மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்துள்ளார். இதையடுத்து மாவட்ட ஆட்சியர் ஊராட்சி மன்றத் துணைத் தலைவி ராஜேஸ்வரியிடம் இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் மூலம் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார். இதையடுத்து துணைத் தலைவி ராஜேஸ்வரி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். ஊராட்சி மன்ற துணைத்தலைவர் குடும்பத்தினரை, ஊராட்சி மன்ற தலைவர் தனது ஆதரவாளர்களுடன் சென்று தாக்குதல் நடத்திய சம்பவம் கள்ளக்குறிச்சி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.