'
சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் நிறைவு விழா இன்று (09/08/2022) மாலை 05.30 மணிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்தியாவின் இதயத்துடிப்பு என்ற பெயரில் டிரம்ஸ் கலைஞர் சிவமணி தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது. அதேபோல், பியானோ கலைஞர் ஸ்டீபன் தேவசி உள்ளிட்டோர் பங்கேற்க உள்ள இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.
விழாவில் பேசிய தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன், "நாம் வரலாறு படைத்துள்ளோம் என்பதை மனநிறைவு பெருமையுடன் கூறுகிறேன். சென்னை குறித்த நினைவுகளை வீரர்கள் அசைபோடுவீர்கள் என நான் நம்புகிறேன். செஸ் ஒலிம்பியாட் இமாலய வெற்றி பெற முதலமைச்சரின் அயராத உழைப்பே காரணம்" எனத் தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து பேசிய விஸ்வநாதன் ஆனந்த், "இந்தியன் மற்றும் சென்னையைச் சேர்ந்தவன் என்ற பெருமையுடன் இங்கு நிற்கிறேன். நேப்பியர் பாலம் முதல் பால் பாக்கெட் வரை செஸ் ஒலிம்பியாட் போட்டி பரவலாக விளம்பரப்படுத்தப்பட்டது. செஸ் ஒலிம்பியாட் போட்டியை சிறப்பாக நடத்தி முடித்த முதலமைச்சர் உள்ளிட்டோருக்கு நன்றி. செஸ் ஒலிம்பியாட் தொடரில் தன்னார்வலர்கள் முகத்தில் புன்சிரிப்புடன் சிறப்பான வேலைகளை செய்தனர். சென்னையும், செஸ் விளையாட்டும் பிரிக்க முடியாதது" எனக் கூறினார்.