கோமதி என்கிற பெயர் சமீபத்தில் இந்தியாவில் அதிக அளவில் இளைஞர்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்ட வரவேற்கப்பட்ட பெயராகும். ஒரு கிராமத்திலிருந்து சாமானியரும் சாதனையாளராக மாற முடியும் என்பதற்கு உதாரணமாக பேசப்பட்டவர். திருச்சியை அடுத்த முடிகண்டம் என்கிற குக்கிராமத்தில் இருந்து கத்தார் நாட்டில் நடந்த ஆசிய தடகள போட்டியில் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வீராங்கனை கோமதி தங்கப்பதக்கம் பெற்றதால் தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
அவருடைய சொந்தவூர் திருச்சியில் பெரிய அளவில் பாராட்டையும் பெற்றார். அந்த மகிழ்ச்சி எல்லாம் அடங்குவதற்கு உள்ளாகவே அவர் ஊக்க மருந்து பயன்படுத்தியதாக ஒரு குற்றச்சாட்டு வட இந்திய ஊடகங்கள் மூலம் பரபரப்பாக வெளியானாது.
இந்நிலையில் கோமதிக்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் திருச்சியில் இருசக்கர வாகனம் பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அப்போது பத்திரிகையாளர்களிடம் பேசிய கோமதி
நான் தடகள பயிற்சி எடுத்த காலகட்டத்தில் என்னிடம் இருசக்கர வாகனம் கூட இல்லை. தற்போது எனக்கு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் இருசக்கர வாகனம் தந்து இருக்கிறார்கள். இதற்காக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். ஆசிய தடகள போட்டியில் நான் ஊக்க மருந்து பயன்படுத்தியதாக ஒரு குற்றச்சாட்டு கூறப்பட்டது. நான் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவள். கடுமையான பயிற்சியின் மூலம் மட்டுமே ஆசிய போட்டியில் வெற்றி பெற்றேன்.
நான் ஊக்க மருந்து பயன்படுத்தவில்லை. இது தொடர்பாக எடுக்கப்பட்ட ‘பி சாம்பிள்’ முடிவு ஆவணம் இன்னும் வழங்கப்படவில்லை. என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டில் உண்மை இல்லை என்பதை நிரூபித்துக்காட்டுவேன். இந்தக் குற்றச்சாட்டு எழுந்தவுடன் நான் தனிப்பட்ட முறையில் எனது ரத்த மாதிரிகளை பரிசோதனை செய்து பார்த்தேன். ஆனால் அந்த முடிவில் ஊக்கமருந்து பயன்படுத்தியதற்கான ஆதாரங்கள் வரவில்லை.
100 சதவீதம் நான் ஊக்க மருந்து பயன்படுத்தவில்லை என்பதை என்னால் உறுதியாக கூற முடியும். இது தொடர்பாக கோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்து உள்ளேன். இந்த குற்றச்சாட்டில் இருந்து விடுபட்டு வருகிற செப்டம்பர் மாதம் கத்தார் நாட்டில் நடைபெற உள்ள உலக தடகள போட்டியில் பங்கேற்பேன் என்ற நம்பிக்கை இருக்கிறது. அந்த போட்டியில் வெற்றியடைந்து ஒலிம்பிக் போட்டியிலும் பதக்கம் பெற்று நமது நாட்டுக்கு பெருமை சேர்ப்பேன். எனது முயற்சிக்கு மத்திய மாநில அரசுகள் முழு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறது.
விளையாட்டு போட்டியில் கடுமையான உழைப்பின் மூலம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உழைப்பின் உதாரணமாக விளங்கிய கோமதி தன் மீது சொல்லப்பட்ட ஊக்கமருத்து குற்றசாட்டில் இருந்து வழக்கின் மூலம் வெற்றிபெற்று வருவார் என்று நம்புவோம்.