தமிழக அரசின் 7.5 சதவீதம் இடஒதுக்கீட்டில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் படிக்க, கிராமப்புற மாணவ, மாணவிகள் தேர்வாகி, தாங்கள் படிக்கும் கல்லூரிகளையும் தேர்வு செய்து சேர்க்கையும் முடிந்துள்ளது.
இதில், புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து 11 மாணவ, மாணவிகள் அரசு மருத்துவக் கல்லூரிகளிலும், 4 மாணவ மாணவிகள் தனியார் கல்லூரிகளிலும் படிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இதிலும் கீரமங்கலம் அரசுப் பள்ளிகளில் படித்த, 5 பேர் மருத்துவக் கல்லூரி மாணவர்களாகி உள்ளனர். இதில் 3 மாணவ, மாணவிகள் செரியலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தொடங்கி ஒரே வகுப்பில் படித்து, ஒரே நேரத்தில் மருத்துவக் கல்லூரிக்குச் செல்கிறார்கள் என்பதில் கிராமமே மகிழ்ச்சியில் உள்ளது.
இவர்களுக்கு ஆசிரியர்கள், கிராம மக்கள், ஊராட்சிகள், முன்னாள் மாணவர்கள் என அனைவரும் பாராட்டி பரிசுகளையும் வழங்கி உள்ளனர். கீரமங்கலத்தில் இருந்து ஒரே நேரத்தில் 5 மாணவ மாணவிகளைத் தயார் செய்து மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பியுள்ளதால் மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் பலர் பாராட்டி ஊக்கத்தொகையும் வழங்கியுள்ளனர்.
இந்நிலையில், கிராமப்புற மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளுக்குச் சென்று ஆங்கிலத்தில் பேசவும், வகுப்புகளைக் கவனிக்கவும் தடுமாற்றம் வரக்கூடாது என்பதற்காக கீரமங்கலம் 'நமது நண்பர்கள்' பயிற்சி மையத்தில் இவர்களுக்காக 'ஸ்போக்கன் இங்கிலீஷ்' இலவசப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. பயிற்சியை, குருகுலம் சிவநேசன் கொடுக்கிறார். இந்தப் பயிற்சியில் கீரமங்கலம், மாங்காடு, அறந்தாங்கி, பேராவூரணி பகுதிகளில் இருந்து மருத்துவக் கல்லூரிக்குத் தேர்வாகி உள்ள மாணவ, மாணவிகள் பங்கேற்று பயிற்சி பெற்று வருகிறார்கள். மேலும், இதே பயிற்சி மையத்தில் மருத்துவக் கல்லூரிகளில் பயன்படுத்தும் வார்த்தைகள் பற்றி புதிய மாணவர்கள் அறிந்துகொள்ள மருத்துவர்களும் பயிற்சி கொடுக்க உள்ளனர்.
இந்தப் பயிற்சி தங்களுக்குப் பயனுள்ளதாக இருப்பதாக, மாணவ, மாணவிகள் கூறுகின்றனர். இதேபோல தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளியில் படித்து மருத்துவக் கல்லூரிக்குத் தேர்வாகி உள்ள மாணவ, மாணவிகளுக்கு இலவச ஸ்போக்கன் இங்கிலீஷ் பயிற்சி கொடுத்தால் நன்றாக இருக்கும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.