திருச்சி கோட்டை சரகத்திற்கு உட்பட்ட காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் காவல் நிலையத்தில் இருந்து பணியாற்றுவதைவிட அதிக அளவில் ரோந்து பணியில் ஆர்வம் காட்டுவதோடு அதிகாரிகளிடம் விரும்பி கேட்டு ரோந்து பணியை மட்டுமே வாங்கிக்கொள்ளுவதாகக் கூறப்படுகிறது.
இதன் பின்புலம் குறித்து நாம் விசாரித்ததில், கோட்டை சரகத்திற்கு உட்பட்ட ஓயாமாரி இடுகாட்டுக்கு அருகே காவிரி கரையோரம் சாக்கு மூட்டைகளில் மணல் அள்ளி விற்பனை செய்யும் கும்பலிடமிருந்து கமிஷன் பெறுவதும், நூற்றுக்கும் மேற்பட்ட தள்ளுவண்டி வியாபாரிகளிடம் தினந்தோறும் ஒரு வண்டிக்கு காலை 30 ரூபாய் மாலை 30 ரூபாய் என கமிஷன் பெறுவதும் அவரது வாடிக்கையாம். அதுமட்டுமல்லாமல், தினமும் '1848' என்ற மதுபான ரகமும் சிறப்பு உதவி ஆய்வாளருக்குக் கையூட்டாகக் கொடுப்பதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.
மேலும், கோட்டை சரகத்திற்கு உட்பட்ட டீக் கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள போதை வஸ்துக்கள் உள்ளிட்டவற்றைப் பல மடங்கு அதிகமாக விற்பனை செய்வதில் கமிஷன் பெறுவதாகவும் கூறப்படுகிறது. அதிலும் ஒவ்வொரு வியாபாரியும் ஒவ்வொரு நாள் முறை வைத்து மதுவும் அன்றைய நாளுக்கான கமிஷனும் கொடுத்து இந்த சிறப்பு உதவி ஆய்வாளரைச் சிறப்பாகக் கவனிப்பதால், பல வியாபாரிகள் அவருக்குப் புனைப் பெயர் ஒன்றையும் வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இவர் தினந்தோறும் வியாபாரிகளிடம் இருந்து 1848 ரக மது பாட்டிலும் கமிஷனும் பெறுவது மட்டுமல்லாமல், மாத கமிஷனும் வியாபாரிகளிடமிருந்து தவணை தவறாமல் பெறுவதாக வியாபாரிகள் கூறுகின்றனர். அவசர உதவிக்கும் அவசர தேவைக்கும் பயன்படுத்தப்பட வேண்டிய ரோந்து வாகனத்தை தற்போது வியாபாரிகளிடமிருந்து கமிஷன் வாங்கவும், கள்ளச்சந்தையில் மதுபானம் விற்பவர்களிடமும், கஞ்சா விற்பவர்களிடமும், பான்மசாலா குட்கா கும்பலிடமும் கமிஷன் வாங்குவதற்காக மட்டுமே சிறப்பு உதவி ஆய்வாளர் பயன்படுத்தி வருகிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, காவல்துறை ஆணையர் இவர் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுப்பாரா என்று கேள்வி பொது மக்களிடமும், வியாபாரிகளிடமும் தற்போது எழுந்துள்ளது.