கரோனாவின் இரண்டாம் அலையில் அதிகப்படியான உயிரிழப்புகள் நடந்துவருகிறது. முதலில் தொற்று பரவலின் எண்ணிக்கை அதிகளவில் இருந்துவந்தது. அதனை அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு ஓரளவுக்கு கட்டுக்குள் கொண்டுவந்துள்ளது. இருந்தபோதிலும், கரோனா இரண்டாம் அலையில் பாதிப்போரின் உயிரிழப்பு இருந்துக்கொண்டேதான் இருக்கிறது. இதில், முன்களப்பணியாளர்களான மருத்துவத்துறையினர், காவல்துறையினர், பத்திரிகைத்துறையினர், தூய்மைப் பணியாளர்கள் ஆகியோரின் மரணமும் நிகழ்ந்துகொண்டேதான் இருக்கிறது.
இந்நிலையில், திருச்சி உப்பிலியபுரம் பகுதியைச் சேர்ந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பாஸ்கர் (55), கரூர் மாவட்டத்திலுள்ள மாயனூர் காவல் நிலையத்தில் பணியாற்றிவந்தார். கடந்த சில நாட்களாக உடல் சோர்வாக இருந்த அவர், நேற்று முன்தினம் கரோனா பரிசோதனை செய்துகொண்டார். அதில் அவருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். இருந்தபோதிலும் சிகிச்சை பலனின்றி அவர் இன்று (14.06.2021) பரிதாபமாக உயிரிழந்தார்.