சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட புழுதிவாக்கத்தில் உள்ள சித்தேரி அண்மையில் பெய்த மழைநீர் நிரம்பி உள்ள நிலையில் அந்த ஏரி சுற்றிலும் குப்பைக் கழிவுகளும் ஆகாயத்தாமரைச் செடிகளும் மாலை நேரங்களில் சமூக விரோதிகள் பயன்படுத்திய மதுபாட்டில்களும் பிளாஸ்டிக் பாட்டில்களும் காண்போரை முகம் சுளிக்கும் வகையில் மண்டிக்கிடக்கிறது. பல முறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று சென்னை தெற்குமாவட்ட தி.மு.க. செயலாளர் மா.சுப்பிரமணியனிடம் பொது மக்கள் முறையிட்டனர்.
அதனைத் தொடர்ந்து தி.மு.க சார்பில் 500க்கும் மேற்பட்ட தன்னார்வளர்களுடன் இன்று காலை 11 மணியளவில் சித்தேரியை தூய்மைப்படுத்த சென்ற நிலையில் மாநகராட்சி அதிகாரிகள் முன்னதாக 9 மணிக்கே வந்து தூய்மைப் பணியை ஆரம்பித்துவிட்டதாகவும், அவர்களே தூய்மை செய்து பொதுமக்களுக்கு ஒப்படைக்கிறோம் என்று தெரிவித்ததாகவும் அதனால், மா.சுப்பிரமணியன் தலைமையிலான 500 தன்னார்வலர்களும் அப்பகுதியைவிட்டு திரும்பிவிட்டதாகவும் தி.மு.க. சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.