தமிழகத்தில் அனைத்து முதியோர் இல்லங்கள், குழந்தைகள் காப்பகங்களை ஜூலை 31- ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யத் தவறுபவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழகத்தில் செயல்பட்டு வரும் அனைத்து முதியோர் இல்லங்களும் (கட்டணம்/ கட்டணமில்லா), தனியார்/ தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் நடத்திடும் அனைத்து முதியோர் இல்லங்களும், முதியோர்களுக்கான குத்தகை விடுதிகள் மற்றும் வாடகை விடுதிகளும் 2009- ஆம் ஆண்டைய தமிழ்நாடு பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நல விதிகளில், விதி பிரிவு 12 (3)- ன் கீழ் 31/07/2021 க்குள் பதிவு செய்யப்பட வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. மேலும், அரசாணை (நிலை) எண்.83, சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை, நாள் 23/11/2016- ல் வெளியிடப்பட்டுள்ள, நெறிமுறைகளின் படி இவ்வில்லங்களைப் பராமரிக்கவும் அறிவுறுத்தப்படுகிறது.
மகளிர் விடுதிகள் நடத்தும் தனியார் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தங்கள் விடுதிகளை 2014- ம் ஆண்டைய தமிழ்நாடு மகளிர் மற்றும் குழந்தைகளுக்கான விடுதிகள் மற்றும் காப்பகங்கள் (ஒழுங்குமுறைப்படுத்தும்) சட்டத்தின் பிரிவுகள் 3 மற்றும் 4 ஆகியவற்றின் படி விடுதிகள் நடத்துபவர்கள் 31/07/2021- க்குள் உரிமம் பெற்று கட்டாய பதிவு செய்யப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. அரசாணை (நிலை) எண்.31, சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை, நாள் 26/06/2014 மற்றும் அரசாணை (நிலை) எண்.12, சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை, நாள் 21/02/2015 ஆகியவற்றில் வெளியிடப்பட்டுள்ள நெறிமுறைகளின் படி இவ்விடுதிகளைப் பராமரிக்க அறிவுறுத்தப்படுகிறது.
மேற்குறிப்பிடப்பட்டுள்ள அறிவுரைகளைப் பின்பற்றத் தவறுபவர்கள் மீது சட்டப்பூர்வமான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். இந்நேர்வில், மேலும் விவரங்களுக்கு சம்மந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட சமூக நல அலுவலகத்தினை அணுகலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது." இவ்வாறு தமிழக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.